திருச்சி, ஜூன் 26–
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது 6 மணி அளவில் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் முதியவர் ஒருவர் கோஷமிட்டபடி விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மின் கோபுரத்தில் ஏறியவர் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் என்பது தெரிய வந்தது. சமூக ஆர்வலரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் இன்று காலை திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கோபுரத்தில் ஏறி ராஜேந்திரனை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கி கொண்டுவந்தனர். முன்னதாக அந்த பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.