போஸ்டர் செய்தி

வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசி சென்றது யார்?-

திருவண்ணாமலை,மே.16–
வேட்டவலம் மனோன்மணி அம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகரம் ஜமீன் வளாகத்தில் இருக்கும் மலை மீது ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் சுவற்றை துளையிட்டு, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5 அங்குலம் உயரம் உள்ள மரகத லிங்கம் மற்றும் 1 கிலோ எடை உள்ள அம்மனின் வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், ஒட்டியானம், மரகதலிங்கம் வைக்க பயன்படுத்திய வெள்ளி நாகபரணம், 4 கிராம் தங்கத் தாலி கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைபோனது.
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அப்போதைய கூடுதல் எஸ்.பி. ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கூடுதல் எஸ்.பி., மாதவன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில், கொள்ளை போன மரகத லிங்கம் வீசப்பட்டிருந்தது. இதனை தொழிலாளி பச்சையப்பன் என்பவர் பார்த்துள்ளார். அவரது தகவலின் பேரில், ஜமீன் வளாகத்துக்கு சென்று, மரகத லிங்கத்தை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பழைய போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
பின்னர், மனோன்மணி அம்மன் கோவில் குருக்கள் சத்தியமூர்த்தி, சண்முகம் மற்றும் ஜமீன் மகேந்திர பந்தாரியர் ஆகியோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் என்று உறுதியாக கூறினர். இதற்கிடையில், மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. மேலும், ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில் மரகத லிங்கத்தை வீசி விட்டு சென்றது யார்? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *