செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை

சென்னை, அக். 12–

வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மரபணு சோதனை 25 பேரிடம் நடத்திய நிலையில் மேலும் 6 பேருக்கு நடத்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.க டந்த 6-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து 6 பேருக்கு மரபணு சோதனை இன்று நடத்தப்படுகிறது. இதற்காக தொடர்புடைய 6 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களது ரத்த மாதிரி மரபணு சோதனைக்காக எடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களின் மரபணு சோதனை முடிவு மற்றும் ரத்த கூறுகள் சென்னையில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. தடய அறிவியல் பரிசோதனைக்கு தேவையான கூறுகளை விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொண்டு வந்து கொடுக்க உள்ளனர். அதன் பின்னர் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தெரிய வரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *