“ராக்கெட் வேக வீரன் மின்னல் வீரன், சாலையில் பறக்கும் வீரன் என்று தம் நண்பர்களிடம் பட்டப் பெயர் எடுத்தவன் பிரவீன் . இவன், டூவீலர் ஓட்டுவதில் ஆகாய சூரன் ஒட்டுபவன் என்று சொல்வதை காட்டிலும் சாலையில் பறப்பவன் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு வண்டியில் வேகம் படு வேகமாக பாய்ந்து பறப்பான்.
இவன் சாலையில் டூவீலரில் ஓட்டினால் பொதுமக்களும் எதிர்வரும் வாகனங்களும் மிரளும் அளவு ஓட்டுவான். வேகமாக செல்வது அவனுக்கு ஒரு ஜாலியைக் கொடுக்கும். அது அவனுக்கு பிடித்தமான விசயம்.
பிரவீன் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன். பெற்றோருக்கு இரண்டாவது பிள்ளை; மூத்தது பெண் பிள்ளை; அப்பா சண்முகம்; தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.
ஒரே ஆண் பிள்ளையாச்சே என்று அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்தனர். அவன் கேட்கும் பொருட்களை தட்டாமல் வாங்கிக் கொடுத்திடுவார் அப்பா. தனக்கு லேட்டஸ்ட் மாடலில் அழகான வண்டி வேண்டும் என்று அவன் கேட்டதால் சரி பையன் விரும்பி கேட்கிறானே என்று உடனே வாங்கி கொடுத்து விட்டார்.
அவர் வங்கியில் மேனேஜராக இருப்பதால் குறைவில்லாத சம்பளம் மேலும், அவர் மனைவி மங்களம் பேன்சி ஸ்டோர் கடை வைத்துப் பார்ப்பதால் அதில் வரும் வருமானம் ஆக பிரவீன் சற்று வசதியான பையன் என்று சொல்லிக் கொள்வார்கள்.
பெற்றோர் வாங்கிக் கொடுத்த வண்டியில் அவன் கல்லூரிக்கு போவதும் நினைத்த இடங்களுக்குச் செல்வதுமாக இருக்கிறான். இவனுடன் படிக்கும் கல்லூரி மாணவ மாணவியரை கவர்வதற்காக கம்பீரமாக போவதும் வருவதுமாக இருப்பான்.
சில நேரங்களில் சாலை விதிகளை மீறி படும் வேகமாக ஓட்டியதற்கு போலீஸார் பிடியில் சிக்கி அபராதத்தை கட்டி வருவான். பிறகு. மறுபடியும் பழையபடி வண்டியை தாறுமாறாக ஓட்டுவான். இவனைப் பற்றி மற்றவர்கள் இவனது பெற்றோர்களிடம் முறையிடுவார்கள். அவர்களும் அவனைப் பலமுறை கண்டிப்பார்கள்
ஏண்டா வண்டியை ரோட்டில் வேகமாக ஓட்டுறே என்று அவனது தாய்க் கேட்டால் ஏம்மா வண்டியை மெதுவா ஓட்டினா அது பேரு வண்டி இல்ல; ஆமை வண்டி என்று நக்கலாக பேசுவான் .
டேய் நான் அப்பாகிட்ட சொல்லிடுவேன் என்று அவள் சொன்னால் …
விடுமா இதையெல்லாம் அப்பா கிட்ட சொல்லிட்டு…
நான் மெதுவாக ஓட்டுகிறேன் என்று சமாளித்துப் பேசிவிட்டு ஓடுவான்.
கொஞ்ச நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓட்டுவான். பிறகு மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போலானான்.
ஒருமுறை வழக்கம் போல் பிரவீன் வண்டியில் வேகமாக போகும் போது நடந்து சென்ற ஒரு பெரியவர் மீது மோத அந்த பெரியவர் கீழே விழுந்து பொதுமக்கள் கூட்டம் சேர்ந்து அவனை நையப்புடைத்து நாலு தர்ம அடி கொடுத்தனர். இந்தத் தகவல் அவனுடைய தந்தைக்குச் செல்ல வீட்டில் கடுமையாக சத்தம் போட்டார்
இனிமேல் நீ காலேஜுக்கு பஸ்ஸில் போ. இல்லேன்னா ஆட்டோவில் போ; வண்டியில் போகாதே என்று கூறினார் அப்ப நான் காலேஜுக்கே போக மாட்டேன் என்று தெனாவெட்டாக பேசினான்.
ஏண்டா உனக்கு இவ்வளவு திமிரு வண்டியில் வேகமா போயி யாரு மேலயாவது இடிச்சிட்டுபோவே ஊர்க்காரங்க சும்மா விடுவாங்களா இல்ல போலீஸ்காரங்க சும்மா விடுவாங்களா கடைசியில் எங்களுக்குத்தானே கெட்ட பேரு எப்படி பிள்ள பெத்து வச்சிருக்கேன்னு எங்களை நேரடியா பேசுறாங்கள்ள…..
“ஊர்க்காரங்க ஆயிரம் பேசுவாங்க அத நீங்க நம்பலாமாப்பா ரோட்ல போறவங்க ஓரமா பார்த்து போகணும் அவங்க நடுரோடுல எதையாவது நினைச்சுட்டு போனா அதுக்கு நானா பொறுப்பு அவன் தந்தை சண்முகத்துக்கு உச்சகட்ட கோபம் கொண்டவாராய்
“விதண்டாவாதமா பேசாதடா. உன்ன ஒரே ஆம்பள பிள்ளன்னு செல்லம் கொடுத்தது தப்பா போச்சு என்று கத்த அந்த நேரம் பார்த்து அவருடைய மனைவி மங்களம் வந்து ஏங்க விடுங்க பிரவின் போகப் போக திருந்திடுவான் என்று அவர் வாயை அடக்கி
ஏண்டா அப்பா உனக்கு நல்லதுக்கு தானே சொல்றாரு என்று கூறி பிரவினை அந்த இடத்தை விட்டு நகர்த்தி விட்டாள். அவனும் மௌனமாக வெளியேச் சென்றான்.
ஒருநாள் பிரவீன் இரவு நேரம் திரைப்படம் பார்த்துவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக பேசியபடி சாலையில் வண்டியில் வந்து கொண்டிருந்தான். நண்பர்கள் அவர்கள் வீடு வந்தவுடன் பிரவீனிடம் விடை பெற்று வண்டியில் சென்றனர். பிரவீனும் அவர்களை அனுப்பிவிட்டு அவனது வண்டியில் வீட்டிற்கு மெயின்சாலையில் வேகமாக வண்டியில் போய்க் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பெரிய ஆலமரம் சந்திப்பில் அவன் வேகமாக திருப்பத்தில் திருப்பினான் அந்த நேரம் பார்த்து ஒருவர் டூவீலரில் வர பிரவீன் வந்த வேகத்தில் வேகமாக மோதிவிட்டான்! மோதிய வேகத்தில் அவர் அய்யோ அம்மா என்று பெரும் அலறலுடன் வண்டியோடு கீழே விழுந்தார் அதிர்ச்சி அடைந்த பிரவீன் விழுந்தவரை தூக்கினால் தமக்கு தர்ம அடி விழுமே என்ற பயத்தில் உடனே அந்த இடத்தை விட்டு வேகமாக நிற்காமல் பறந்தான்!
அவன் வீடு வந்து சேரும் வரை மனதில் திக்திக்வென்று அடித்தது. பதட்டத்துடன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் விருட்டென்று சென்றான். உள்ளே இருந்த அவனது அம்மா பிரவீனை பார்த்து என்னடா ஒரே பதட்டமா இருக்கியே ஏன் இப்படி வேகமா வர்ற எனக் கேட்டாள்.
ஒன்னும் இல்லம்மா சினிமாவுக்கு போயிட்டு வந்தேன். அதனால என்று பேச்சை இழுத்தான்
சரி வாடா, உட்காரு, என்று சொல்லியவாரே அவனுக்கு சாப்பாடு தயார் செய்ய சமையல் அறையில் நுழைந்தாள் மங்களம்.
“எங்கே அப்பா? என்று அவன் கேட்க
உங்க அப்பா இன்னைக்கு ஸ்பெஷல் வேலை முடிச்சிட்டு லேட்டா வர்றதாக சொன்னார்.
இந்நேரம் வரக்கூடிய நேரம் தான் இப்ப வந்துடுவாரு என்றாள் கை கால்கள் கழுவிட்டு வா சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் என்று கூறி முடிப்பதுக்குள்.
வீட்டு வாசல் வெளியில் ஒரு போலீஸ்கார் வந்து “வீட்டிலே யார் இருக்கா? என்று குரல் கொடுத்தார். குரல் கேட்டு பிரவீன் அம்மா வெளியே வந்தாள். சார் நீங்க யாரை பார்க்க வந்திருக்கீங்க? என்றாள். பேங்கில் வேலை பார்க்கிற சண்முகம்ங்கிறது…. என்று கேட்டார் போலீஸ்காரர்.
என் வீட்டுக்காரர் தான் என்ன விஷயமா கேக்குறீங்க! உங்க வீட்டுக்காரரா? மெயின் ரோட்டில் ஆலமரத்து பக்கத்துல யாரோ டூவீலர் காரன் உங்க வீட்டுக்காரர்? மேலே மோதி இரத்த வெள்ளமாக கீழே கிடந்தார் காலில் பலமா அடிபட்டு இருக்கு போல துடியா துடிச்சிட்டு இந்தாரு எங்களுக்கு தகவல் கிடைச்சு அவரை கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி இருக்ககோம் என்று சொல்லியதும் ஓவென்று கத்தியபடி அய்யோ கடவுளே அவர் என் வீட்டுக்காரர்யா. டூவீலர் மோதியிடிச்சா? இப்ப எப்படி இருக்காரு? என்று அதிர்ச்சி மேலிட ஒப்பாரி வைத்து அழ. அழும் சத்தம் கேட்டு பிரவீன் வீட்டுலிருந்து வெளியே வந்தான்.
விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அப்பா நானே உங்கள டூவிலர்ல மோதிட்டேனா இதை கேட்ட அதிர்ச்சியடைந்த மங்களம் அய்யோ அம்மா என்று தலையில் அடித்தபடி அவனும் கத்த என்ன அப்பாவை டூவீலர்ல மோதியது நீதானா? என்னடா சொல்ற! ஆமாம்மா எனக்கு அப்பானு தெரியாது நான் ஆலமரத்து கிட்ட வேகமா வண்டியில வர்றப்ப ஒருத்தர் மேல மோதிட்டேன் அவர் கீழே விழுந்ததும் அந்த இடத்தை விட்டு வேகமா வந்துட்டேன் அது நம்ம அப்பா என்று தெரியாமல் போச்சு! என்று கூறியதும் பிரவீனை அவனது கன்னத்தில் பளார் பளார்னு அடித்து
ஏன்டா அப்பாவ சாகடிக்க பாத்தியாடா அடப்பாவி! நீ நல்லா இருப்பியா! என்றபடி பிரவீன் முதுகில் மேலும் ஒரு அடி கொடுத்தாள். இதைக் கேட்ட போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்து
“ஏப்பா வண்டியை பாத்து ஓட்ட கூடாதா? உங்க அப்பாவையே மோதி தள்ளிட்டாயே நாங்க எவ்வளவோ சொல்லித்தான் பார்க்குறோம். உங்களை மாதிரி படிக்கிற பையன்கள் திருந்த மாட்டீறிங்க. வண்டியை ஓவர் ஸ்பீடா ஓட்டாதீங்க; விபத்துக்குள்ள ஆயிடும்னு விழிப்புணர்வும் கொடுத்துட்டுத்தான் வறோம்; கேட்க மாட்டீறிங்களே உங்களால் பொதுமக்கள் எத்தனை பேர் விபத்தாயி பாதிப்புல இருக்காங்க. அவங்க உயிர் உங்களுக்கு சாதாரணமா போச்சா! கடுமையா சட்டம் போட்டாலும் நீங்க மாறவே மாட்டீறிங்க…. என்று பிரவீனை திட்டிவிட்டு.
“அம்மா சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு போங்கம்மா என்று போலீஸ்காரர் கூறிவிட்டுச் சென்றார்.
அம்மா என்னை மன்னிச்சிடுங்க அப்பாவும் நீங்களும் எனக்கு எவ்வளவோ எடுத்து சொன்னீங்க வண்டியை மெதுவா ஓட்டு பார்த்து ஓட்டுனு சொல்லியும் நான் கேட்கல இன்னைக்கு அப்பாவையே மோதிட்டு வந்துட்டேன் அய்யோ…..! என்று பிரவீன் அழுது புலம்ப அதை பொருட்படுத்தாமல் பிரவீன் தாய் ஆஸ்பத்திரியை நோக்கி வேகமாக ஓடினாள்.
அவள் பின்னால் பிரவீனும் பின் தொடர்ந்தான்….
இனிமேல் வண்டியை வேகமாக ஓட்டக்கூடாது என மனதில் நினைத்தவனாய்.