ஆன்டிகுவா, ஜூன் 24–
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த பிரிவில் அடுத்து அரையிறுதிக்கு தகுதி பெறும் அணியை முடிவு செய்யும் ஆட்டம் இன்று காலை 6 மணிக்கு ஆன்டி குவாவில் நடந்தது. இதில் வெஸ்ட் இண் டீஸ்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்கா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 136 ரன் இலக்காக இருந்தது.ரோஸ்டன் சேஸ் 42 பந்தில் 52 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கெய்ல் மேயர்ஸ் 35 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷம்சி 3 விக்கெட்டும், ஜான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பின்னர் களம் இறங்கியது. ஆட்டத் தின் 2-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டை இழந்தது.தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குயின் டன் டிகாக் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆந்த்ரே ரஸ்சல் இருவரையும் ஒரே ஓவரில் ‘அவுட்’ செய்தார். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப் புக்கு 15 ரன் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. வெளிப்புற ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி காலதாமதமாக தொடங்கியது.
டிஎல்எஸ் முறைப்படி7 ஓவரில் 123 ரன் இலக்கு
அதன்பின் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டு 123 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு மார்க்ரம் – ஸ்டப்ஸ் சிறிது நேரம் நிலைத்து ரன்கள் சேர்த்தனர். அதில் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கிளாசென் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார். இதனால் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது. 10 பந்துகளை சந்தித்த கிளாசென் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய மில்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து ஸ்டப்ஸ் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட மார்கோ ஜான்சன் அதனை சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பெற வைத்தார். 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 29 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.