அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பினார்
புதுடெல்லி, பிப். 14–
‘வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்’ என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக 12ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், அமெரிக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தருமான விவேக் ராமசாமி சந்தித்து பேசினார்.
பின்னர், அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியை கட்டியணைத்து டிரம்ப் வரவேற்றார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
‘வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (மேக் அமெரிக்கா கிரேட் எகைன் – மகா) என்ற டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் எகைன். இரண்டு ஜனநாயாக சக்தியையும் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி செழிப்பான நாடாக உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இந்தியாவுக்கு வர மோடி அழைப்பு விடுத்தார்.
தாயகம்
திரும்பினார் மோடி
அமெரிக்கா பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். அவரை விமான நிலையத்தில் அந்நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.