சிறுகதை

வெள்ளை மனம் – ராஜா செல்லமுத்து

சந்தடிகள் நிறைந்த சாலையில் அந்த சிறு நகரப் பேருந்து சன்னமாக நகர்ந்து கொண்டிருந்தது. இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் இடைவிடாமல் சிறு பேருந்தோடு சென்று கொண்டிருந்தன.

முகக் கவசம் அணிந்தவர்கள் முகக் கவசம் அணியாதவர்களை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

நீங்க சரியா முகக்கவசம் போட்டாதான் மத்தவங்களுக்கு நோய் பரவாது. உங்களிடமிருந்தும் அது மத்தவங்களுக்கு பரவாது.

சரியா போடுங்க என்று நாட்டின் மீதும் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் மீதும் அக்கறை கொண்ட ஒரு பெண்மணி பேசினாள்.

இல்லைங்க. இந்த முக மூடியப் போட்டுப் போட்டு மூச்சு முட்டுது. அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டேன் என்று முகக்கவசம் போடாதது அதற்கான காரணத்தை ஒரு பெண்மணி சொன்னாள்.

இதை அந்தப் பேருந்தில் இருந்த அத்தனை பேரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரைச்சல் சத்தத்திற்கு நடுவே அந்தச் சிறு நகரப் பேருந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இருக்கைகள் முழுவதும் பயணிகள் அமர்ந்திருந்தார்கள். ஆங்காங்கே சில பயணிகள் நின்று கொண்டிருந்தார்கள். பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு தேவையான பெயரைச் சீட்டுகளை நடத்துனரிடம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஓட்டுநரின் அருகே இருந்த இரண்டு இருக்கையில் சுயம்பு அவரது நண்பர் வின்சென்ட் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

ஓட்டுனர் அருகில் அமர்ந்து இருந்ததால் அந்தச் சிறு பேருந்திற்கு முன்னால், பின்னால் வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணாடியில் பட்டுப் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது.

லாவகமாக பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுநர்.

பிரதான சாலையிலிருந்து விலகி நகரத்தின் தெருக்களில் நுழைந்தது அந்தச் சிறு பேருந்து.

பாம்…. பாம்…. என்று ஹாரனை அடித்தபடியே பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுனர்.

மெயின் ரோட்டில் பஸ் ஓட்டிரலாங்க. ஆனா சந்து பொந்துல ஓட்டுறது ரொம்ப கஷ்டம். குறுக்க மறுக்க வண்டி ஓட்டிட்டு போவாங்க. இதெல்லாம் பார்த்து பத்திரமா ஓட்டணும் என்று வின்சென்ட் சொல்ல ,

அதை ஆமாம் என்பது போல் தலையை ஆட்டியபடியே ஸ்டியரிங்கை வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர்.

சுயம்பு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஓட்டுனரின் இருக்கைக்கு முன்னால் இருந்த தூசியைப் பார்த்து தன் பொது அறிவை அங்கே பறைசாற்றினார்.

என்னங்க இது … அரசாங்க வண்டி இப்படி குப்பை வண்டி மாதிரி இருக்கு. அரசாங்கத்தில வேலை செய்றவங்க எல்லாம் சரியா வேலை செஞ்சா இந்த மாதிரி இருக்காது. எப்படியும் இந்த டிப்போ உள்ள கிளீனர்னு போஸ்டிங் போட்டிருப்பாங்க . அறுபதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக்கிட்டு இந்த சின்ன வேலையைக் கூட செய்யாம இருக்காங்க. பாருங்க எவ்வளவு தூசி இருக்குது. இதெல்லாம் கழுவுவாங்களா மாட்டாங்களா? என்று தன்னுடைய பொது நலத்தை அந்தப் பேருந்தில் விதைத்தார் சுயம்பு. அவர் பேசிய பேச்சு ஓட்டுனரின் காதில் விழுந்து இருந்தாலும் அதைச் செவிமடுக்காமல் ஸ்டியரிங்கை வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுனர்.

சில நிறுத்தங்களில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதும் அந்தப் பேருந்து ஆடி ஆடி நகரத் தெருக்களில் நகர்ந்து கொண்டிருந்தது.

வின்சென்ட் ஜன்னல் வழியே பார்த்தார்

சுயம்பு பார்த்தீங்களா? ரேசன் நிற்கிறது மாதிரி, டாஸ்மாக் கடையில் நிக்கிறாங்க. இது என்ன ஊரு சம்பாதிக்கிற பணத்தில் பாதி பணத்தை குடித்து விடுவான் போல என்று தன் பங்குக்கு பொது நலத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார் வின்சென்ட்.

இருவரும் தனித்தனி இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே நகரத்தில் நடக்கும் நிகழ்வுகளை தன் கண் கொண்டு பார்த்த படியே ரசித்துக் கொண்டும் தேவையில்லாதவற்றை திட்டிக் கொண்டும் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு நிறுத்தத்தில் திடீரென ஏறிய ஒரு பயணி தான் இறங்க வேண்டிய இடம் இன்னதென்று தெரியாமல் விழித்தபடி நின்று கொண்டிருந்தார்.

ஓட்டுனர் அவரை அருகில் அழைத்தார் .

எங்க போகணும்? என்று கேட்டார்

எம்ஜிஆர் சிலை , நெசப்பாக்கம் என்று சொன்னார் அந்த பயணி.

எம்ஜிஆர் சிலையா? இங்க நில்லுங்க. நான் உங்களுக்கு சாெல்றேன் என்றார் ஓட்டுநர் . நகர தெருக்களில் அந்தச் சிறு பேருந்து சென்று கொண்டிருப்பதால் 20 வீடுகளுக்கு ஒரு நிறுத்தம் என்றபடியே அந்தப் பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது .

ஓட்டுனரின் அருகில் நிற்பவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு பிரச்சினையில் இருந்திருப்பார் போலத் தெரிகிறது.

அடிக்கடி அவர் செல்போனுக்கு போன் வந்து கொண்டே இருந்தது .

ஓட்டுநர் அவரின் அவசரத்தை புரிந்துகொண்டு இன்னும் 5 ஸ்டாப்புக்கு பக்கம் பக்கம் தான். நான் சொல்றேன் நில்லுங்க என்று அந்தப் பயணிக்கு கரிசனையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஓட்டுநர்.

அப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வின்சென்ட் , சுயம்பு ஓட்டுனரை கவனித்தார்கள் .

அருகில் நின்ற பயணி பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்.

அவர் தன் செல்போனுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பேசும்போது ,அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் ஓட்டுனருக்கும் அவரை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டும் தெரிந்தது.

அந்த ஓட்டுனர் நின்றுகொண்டிருக்கும் பயணியின் அவசரத்தை புரிந்துகொண்டு ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்து, கிளட்சை மிதித்து கொஞ்சம் வேகம் கூட்டினார். எதிரில் வரும் வாகனங்களில் மோதி விடுமோ? என்ற பயம் பயணிகளுக்கு இருந்தாலும் நின்று கொண்டிருக்கும் பயணியை குறித்த நேரத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற ஒரு வேகம் ஓட்டுநரின் மனதில் இருந்தது .

அந்த ஓட்டுநரின் செயலை வின்சென்ட், சுயம்பு கவனித்துக் கொண்டே வந்தார்கள்.

இடையே நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் ஒரு பயணி கையை காட்ட தலையை ஆட்டியபடியே

வா வண்டியில் ஏறு என்பது போலவே அந்தப் பயணியை ஏற்றிக்கொண்டார் அந்த ஓட்டுனர்.

இதையும் வின்சென்ட் , சுயம்பு கவனித்தார்கள் .ஓட்டுனரின் அருகே பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்த பயணிக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இன்னும் இரண்டு ஸ்டாப் இன்னுமொரு ஸ்டாப் என்று அக்கறையாக பேசிக்கொண்டே வந்தார்.

இந்த ஸ்டாப்புக்கு அடுத்து நீங்க இறங்க வேண்டிய இடம் எங்கே என்று கேட்டபோது அந்தப் பயணிக்கு முகம் மலர்ந்தது.

அந்தப் பயணி இறங்க வேண்டிய நிறுத்தத்தை சுட்டிக்காட்டினார் ஓட்டுநர் .

அந்தா நீங்க கேட்ட எம்ஜிஆர் சிலை இருக்கு என்று சொன்னதும்

ஐயா ரொம்ப நன்றி என்று அந்த ஓட்டுனரை கையெடுத்துக் கும்பிட்டு சென்றார் அந்தப் பயணி.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தனர் சுயம்புவும் வின்சென்டும் . லாவகமாக அந்த சிறு பேருந்தை ஓட்டி அதன் கடைசி நிறுத்தத்திற்கு வர எத்தனித்து கொண்டிருந்தார் ஓட்டுநர் .

இடையே ஒரு திருப்பத்தில் ஒரு பெண் பயணி நின்றுகொண்டிருந்தார். அவரையும் அந்த பேருந்தில் ஏற்றுக் கொண்டார் அந்த ஓட்டுநர்.

எங்கம்மா போகணும் ?

வளசரவாக்கம் என்ற அந்த பெண்மணி சொல்ல

கரிசனையோடு அந்த பெண்ணையும் ஏற்றிக் கொண்டார்.

இதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தனர் பயணிகள்.

வின்சென்ட், சுயம்பு அவர்களது நிறுத்தம் வரும் போது அவர்கள் மனதில் ஆணி அடித்தது போல ஒரு உண்மை விளங்கியது.

சுயம்பு சொன்னார்

பேருந்து முழுவதும் தூசு, அழுக்கு படிந்து இருக்கிறது. அரசாங்க சம்பளத்தை வாங்கிக் கொண்டு இவர்களை ஏன் இந்த பொதுச் சொத்தை பராமரிக்காமல் விட்டு இருக்கிறார்கள்?

என்று நான் எதிர்த்தேன்; திட்டினேன். ஆனா பேருந்து தான் அழுக்காக இருக்கு. அதை ஓட்டிக் கொண்டு இருப்பவரின் மனம் வெள்ளை. அவரின் ஈகை குணம் மனிதர்களை அரவணைக்கும் பண்பு இவைகள் எல்லாம் இங்கே படிந்திருக்கும் தூசியை மறைத்துவிட்டது. நான் தவறாக நினைத்துவிட்டேன்; ஓட்டுனர் நல்லவர். பேருந்து எப்படி இருந்தால் என்ன? பயணிகளை பாதுகாப்பாக காெண்டு போவதே ஒரு ஓட்டுநரின் கடமை .அதை சரியாக செய்திருக்கிறார் என்று சுயம்பு சொன்ன போது,

அதற்கு ஆமா என்று சொன்னார் வின்சென்ட்

அப்போது கடைசியாக அவர்கள் இறங்க வேண்டிய கடைசி நிறுத்தம் வந்து சேர்ந்தது .

சுயம்பு எழுந்து போய் அந்த ஓட்டுனரை பார்த்து அந்த ஓட்டுனரிடம் கைகொடுத்தார்.

சார் நான் இந்த பஸ்ல ஏறும் போது , இது என்ன பஸ் குப்பை வண்டி மாதிரி இருக்குது. யாரும் கூட்ட மாட்டார்களா? அரசாங்க சாெத்துன்னா இப்படி தான் இருக்கணுமா? அரசாங்க சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஏன் இப்படி அரசாங்க சொத்தை சுத்தப்படுத்தாமல் இருக்காங்கன்னு நானும் என்னோட நண்பரும் பேசிட்டு வந்துட்டு இருந்தோம்.

ஆனா இது அத்தனையையும் அடித்து நொறுக்குவது மாதிரி உங்களுடைய பண்பு இருந்தது.

பஸ் அழுக்கா இருந்தா என்ன சார் ? உங்க மனசு வெள்ளை என்று கைகுலுக்கினார் .

அவர்கள் பேசிய பேச்சுக்கு மறுவார்த்தை பேசாமல் கண்கலங்கினார் அந்த ஓட்டுநர்.

சுயம்புவின் வின்சென்டும் பேசிய பேச்சை கேட்ட அந்த பயணிகள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே அந்தக் கடைசி நிறுத்தத்தில் இருந்து இறங்கினார்கள் .

அந்த ஓட்டுநர் அத்தனை பயணிகளையும் இறக்கிவிட்டார்.

ஒரு யூ-டர்ன் அடித்து மறுபடியும் முதலிடத்தில் இருந்து துவங்கும் அந்தப் பயணத் தடத்தில் போய் நிறுத்தினார் ஓட்டுநர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *