செய்திகள்

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த 19 கருவிகளுடன் விண்கலத்தை அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

Makkal Kural Official

சென்னை, அக்.8-

முதல் முறையாக வெள்ளி கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், அங்குள்ள எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 2-வதாக அமைந்துள்ள கோள் வெள்ளி (வீனஸ்). இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோளாகும்.

இந்த வெள்ளி கோள் குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்கலம் ஒன்றை அனுப்ப தயாராகி வருகிறது. இதில் 19 சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி கிரகத்தின் வளிமண்டலம், நிலப்பரப்பு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய உள்ளது.

இந்த பணி மூலம் முதல் முறையாக வெள்ளியின் நிலப்பரப்பு வரைபடத்தையும் உருவாக்கும். இது எதிர்கால பயணங்களுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் முன்னாள் சோவியத் யூனியனும் 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் அனுப்பப்பட்ட விண்கலங்களால் வெள்ளி மற்றும் வளிமண்டலத்தைப் பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.

இந்த பணிகளால் வெள்ளி கோளின் வளிமண்டல சுழற்சி, காலநிலை மற்றும் மேற்பரப்பு அம்சங்களைப் தெரிந்து கொள்ள உதவுகிறது.

வெள்ளிக்கு அனுப்பப்படும் 19 சிறப்பு கருவிகள் கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்ய உதவும். இந்த 19 கருவிகளில், 16 முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். குறிப்பாக, சுவீடன், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளுடன் இணைந்து தலா ஒரு கருவி வீதம் 3 கருவிகள் உருவாக்கப்படுகிறது.

இவை வெள்ளி கோளின் வளிமண்டல இயக்கவியல், காலநிலை மற்றும் மேற்பரப்பு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளன. இந்த பணியானது வெள்ளிக்கோள் பற்றிய விரிவான புரிதலை வழங்கும்.

இந்த ஆய்வின் மூலம் வெள்ளி கோளின் செயலில் உள்ள எரிமலைகள் அல்லது எரிமலை இருக்கும் இடங்கள் மற்றும் பள்ளங்களை கண்டறியவும் முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *