செய்திகள்

வெள்ளம்: அசாம் தேசிய பூங்காவில் 143 விலங்குகள் பலி

கவுகாத்தி, ஜூலை 31-–

கடந்த ஒருமாத காலமாக வெளுத்துக்கட்டி வரும் பெருமழையால் அசாமிலுள்ள தேசிய பூங்காவில் ஏராளமான விலங்குகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளன. 143 விலங்குகள் பலியாகியுள்ளன.

அசாம் மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் எங்கும் பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது. மனிதர்களை முடிந்தவரை மீட்டு முகாம்களில் தங்க வைக்கும் வேலைகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவான காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள ஏராளமான விலங்குகள் படும் அவதிகள் நம்மை கலங்க வைக்கின்றன.

இதையொட்டி வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் அனைத்து விலங்குகளையும் மீட்பது மிகவும் சவாலான காரியம். சுற்றிலும் வெள்ளநீராக இருப்பதால் உணவு தேடி உயரமான இடங்களுக்கு விலங்குகள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழல் போன்றே 1988–ல் இருந்து 6 மிகப்பெரிய வெள்ளத்தை காசிரங்கா தேசிய பூங்கா கண்டுள்ளது.

அதில் 3 முறை 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. இந்த பூங்காவில் இருந்த 90 சதவீத மான்கள் அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கை விலங்குகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இம்முறை சற்றுக் கூடுதலாகவே சந்தித்துவிட்டன. புல் தரைகள் அனைத்தும் மூழ்கிவிட்டன. இதனால் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காட்டெடுமை, காண்டாமிருகங்கள் ஆகியவை புற்களைத் தான் உணவாக உண்டு வாழ்கின்றன. இதில் மான்கள் புதிதாக வளர்ந்து நிற்கும் புற்களைத் தான் உண்ணும் என்பதால், அதன் உணவு தேவை பூங்கா நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. காசிரங்கா பூங்காவில் தாவரங்களின் வளர்ச்சிக்கு வெள்ளம் அவசியமான ஒன்று தான்.

ஆனால் தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கு மிகவும் ஆபத்தானது என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பூங்கா நிர்வாகம் அளித்துள்ள தகவலின்படி, 60 சதவீத பகுதிகள் நீருக்கு அடியில் மூழ்கிவிட்டன. 143 விலங்குகள் பலியாகியுள்ளன. இதில் ஹாக் வகை மான்களின் எண்ணிக்கை மட்டும் 104 ஆகும். இப்படியொரு பாதிப்பு வருங்காலத்திற்கான ஒரு படிப்பினை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய சூழலில் விலங்குகளுக்கு செயற்கை உணவுகள் அளிப்பது என்பது அதன் குணாதிசயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே இயற்கையான தடுப்புகளை அகற்றுவது ஒன்றே தற்போதைய தீர்வு. இதன்மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் தப்பிச் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *