நாடும் நடப்பும்

வெளியேறியது இங்கிலாந்துக்கு சாதகமே!

இந்த வருட துவக்கத்தில் ஒருவழியாக ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து பிரிந்துவிட்டது. அதற்கான பிரிவு ஒப்பந்தம் ஜனவரி 31 அன்று கையெழுத்தாகியபோது 2020 ஆம் ஆண்டு முடியும் நாளில் ( டிசம்பர் 31 அன்று) இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் என்பது உறுதியானது.
இப்படி ஒரு கூட்டமைப்பில் பலம் பொருந்திய பொருளாதாரமாக இருந்த இங்கிலாந்து வெளியேறுவது அவர்களுக்கு சாதகமாக? பாதகமா? என்ற விவாத கேள்வியை கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் விவாதிக்கப்பட்டு வருவது அறிந்ததே.
ஆனால் இங்கிலாந்து அரசும் மக்களும் கருத்துக்கணிப்பு, வாக்களிப்பு நடத்தியதில் முழுமையாக வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்க ஆதரவு இருந்தது.

இதர நாடுகளுடன் தங்கு தடையில்லா ஒரே விசா, ஒரே கரன்சி திட்டத்தால் எல்லோராலும் சுற்றுலாவுக்கும் மேல் படிப்பிற்கும் பணிகளுக்காகவும் மருத்துவ சேவைகளுக்காவும் எங்கும் செல்ல முடிந்தது. ஆனால் அந்த வசதி இனி இங்கிலாந்து பிரஜைகளுக்கு கிடைக்காது. ஐரோப்பிய யூனியனின் வசதிகள் ஏதும் வேண்டாம் என்று உதறித் தள்ள என்னதான் காரணம்?
இங்கிலாந்திற்கு கல்விக்கும் மருத்துவ வசதிகளுக்கும் வேலைக்கும் சுற்றுலாவுக்கும் இதர நாட்டு மக்கள் தினமும் வந்து குவிகிற அளவிற்கு இங்கிலாந்து பிரஜைகள் இதர ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது!


இங்கிலாந்தில் கார் தயாரிப்பு தொழிற்கூடங்கள், ஆராய்ச்சி மையங்கள், மேம்பட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கிறது. அதில் அதிகமாக இருப்பது ஐரோப்பிய யூனியன் பிரஜைகள் என்பதால் இங்கிலாந்து தமக்கு மதிப்பூட்டலாக அதிக வருமானம் வர வேண்டியது தடைபட்டிருப்பதை மாற்றியமைக்க ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஆலோசித்து புதிய ஒப்பந்த விதிகள் வேண்டும் என்று கோரியது.ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் இங்கிலாந்தால் அப்படி ஒரு ஒப்பந்தத்தை பெற முடியவில்லை. இறுதியில் தனித்து இயங்க முடிவு செய்துவிட்டது.
இதனால் இங்கிலாந்துக்கு வந்து படிக்கவும் பல்வேறு வசதிகளை அனுபவிக்கவும் செலவுகள் இரட்டிப்பாகி விடும்!
ஒரு வகையில் இரு தரப்பினருக்கும் இழப்பாகவே இருக்கிறது. இதற்கிடையே இங்கிலாந்து தனது உரிமைகளை கட்டுப்படுத்திக்கொள்ள தயார் என்றும் அறிவித்து வந்தாலும் ஐரோப்பிய யூனியனுக்குள் மீண்டும் நுழைய முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகிவிட்டது.

இப்படியே போனால் இரு தரப்பில் யாருக்கு வசதியாக இருக்கும்? தற்போது ஐரோப்பிய யூனியனை விட்டு இங்கிலாந்து வெளியேறிச் செயல்படுவதில் இருக்கும் சாதகங்கள் தெரிகிறது.
கோவிட் – 19 தடுப்பூசியை இங்கிலாந்து தான் உலகிலேயே முதன் முதலில் ஏற்றுக் கொண்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது.
ஆனால் ஐரோப்பிய யூனியன் சட்டவிதிகள் படி இப்படி ஒரு புதிய மருந்தை எந்த விவாதமுமின்றி விலை நிர்ணயிப்பு, யார் யாருக்கு முதலில் தருவது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்க குறைந்தது 4 மாதங்களாவது கடந்து இருக்கும்!
ஆனால் இங்கிலாந்து இன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு முன்னுதாரண முடிவை எடுத்து அதை நடைமுறைப்படுத்தியும் விட்டது.

பொருளாதார ரீதியாகவும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் திணறிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது 9% சரிவை ஐரோப்பிய யூனியன் கொரோனா பெரும் தொற்று காரணமாக சந்தித்துள்ளது. இதை சரி செய்ய ஒவ்வொரு நாடும் தன்னிச்சையாக நிதி ஆளுமை திட்டங்களை அறிவிக்க முடியாது! அதாவது வர இருக்கும் பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்க வழியில்லை. ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் எடுக்க இருக்கும் நிதி ஆதார முடிவுகளை ஐரோப்பிய யூனியன் தலைமையே முடிவு செய்யும். ஓரளவு பரந்த நோக்குடன் தான் அந்த அமைப்பின் தலைமை முடிவு எடுத்தாலும் பல்வேறு காரணங்களால் ஒரு நாட்டின் தீர்வு முழுமையாக இருக்க முடியாது.
ஆனால் தற்போது இங்கிலாந்து கொரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்சிக்கு வேண்டிய சலுகைகள், வரிகள், செயல் திட்டங்கள் போன்றவற்றை தங்கள் நாட்டின் சாதக பாதகங்களை மனதில் கொண்டு முடிவு எடுத்து நடைமுறைப்படுத்த முடியும்.

ஐரோப்பிய யூனியன் தலைமையின் முதன்மை கவனம் யூரோ பணத்தின் மதிப்பைச் சீராக்குவதில் தான் இருக்கும். ஆனால் பல நாடுகள் தங்களது பொருளாதார வீழ்ச்சியை நிலை நிறுத்த முடியாத நிலையில் மேலும் புது பாரத்தை சுமக்க வேண்டியது வரலாம்!
ஆக கிரிக்கெட் விளையாட வந்த அணி எப்படி சிறப்பாக கால்பந்து ஆட்டத்தை ஆடுவது என்றா கவலை பட முடியும்? அது போன்றே இங்கிலாந்து தன் தலைவலிக்கு உரிய மருந்தாக எதைத் தேர்வு செய்து கொள்வது என்பதை தீர்மானித்து செயல்பட முடியும். அதனால் பிரிக்சிட், அதாவது ஐரோப்பிய யூனியனிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறுவது இங்கிலாந்துக்கு சாதகமானது என்றே தெரிகிறது.

ஆனால் சர்வதேச நடப்புகளில் குறிப்பாக அமைதி பேச்சு வார்த்தைகளில் இங்கிலாந்தின் குரலை விட ஐரோப்பிய யூனியனின் குரலே சக்தி மிகுந்ததாக இருக்கக்கூடும். இதர வல்லரசுகள் குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐரோப்பிய யூனியனின் கருத்துக்கே முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *