செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நோய் பரிசோதனை வசதி: கலெக்டர் ஆய்வு

சவிதா பொறியியல் கல்லூரியில்

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நோய் பரிசோதனை வசதி:

கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம், ஜூன் 30–-

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் தண்டலம் சவிதா பொறியியல் கல்லூரியில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கொரோனா வைரஸ் நோய் பரிசோதனை காலத்தில் தங்க வைத்திட செய்யப்பட்டுள்ள வசதிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளிநாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வெளியிடும் வரை ஸ்ரீபெரும்புதூர் வட்டம் தண்டலத்தில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரியில் 1140 நபர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பயணிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள உணவு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். எழிச்சூரில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கும் அறையில் குன்றத்தூர், படப்பை சார்ந்த கொரோனா வைரஸ் நோய் தொற்றுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தண்டலம் சவிதா பொறியியல் கல்லூரியில் வெளிநாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த 395 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

எழிச்சூரில் உள்ள கட்டுமானத் தொழிலாளர் தங்கும் அறைகளில் 650 அறைகள் கொரோனா வைரஸ் நோயினால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்திட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா வைரஸ் நோய் பாதித்த 27 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை மருத்துவ குழுவினர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பழனி, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தனித்துணை கலெக்டர் செல்வமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *