செய்திகள்

வெளிநாட்டு காணிக்கை பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி

திருப்பதி, ஏப்.22–

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம் செலுத்துகின்றனர்.

நேரடியாக தரிசனம் செய்ய முடியாத வெளிநாட்டு பக்தர்கள் ஆன்லைன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை டெபாசிட் செய்கின்றனர்.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் காணிக்கை மத்திய அரசின் அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி பெற வேண்டும்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உட்பட அறக்கட்டளைகள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன் அந்த பணத்தை யார், எப்படி, எப்போது வழங்கினர் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

திருப்பதி தேவஸ்தானமும் லைசென்ஸ் பெற்று வெளிநாட்டு பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் குறித்து மத்திய அரசுக்கு தகவல் அளித்து வந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக லைசென்சை தேவஸ்தான அதிகாரிகள் புதுப்பிக்காமல் இருந்தனர்.

இதனால் வெளிநாட்டு பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வங்கி கணக்கில் டெபாசிட் செய்த ரூ.30 கோடி வெளிநாட்டு கரன்சியை தேவஸ்தான கணக்கில் வரவு வைக்காமல் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து இருந்தது.

அன்னிய பங்களிப்பு ஒரு முறை சட்டத்தை புதுப்பிக்காததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ.10 கோடி அபராதம் விதித்தது.

தேவஸ்தான அதிகாரிகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அபராத தொகை ரூ.3 கோடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வியாபார நிறுவனம் இல்லை எனவும், இது ஒரு சமூக சேவை செய்யக்கூடிய ஆன்மீக ஸ்தலம்.

எனவே மத்திய அரசு விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

பக்தர்களின் விமர்சனம் காரணமாக அபராத தொகையை திரும்ப வழங்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டன.

அதே நேரத்தில், திருப்பதி தேவஸ்தானம் வசம் உள்ள வெளிநாட்டு நாணய நன்கொடைகளை வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. வெளிநாட்டு கரன்சி நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காவிட்டாலும், வங்கியில் டெபாசிட் செய்ய தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *