செய்திகள்

வெளிநாட்டு அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் : தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தல்

Makkal Kural Official

புதுடெல்லி, மார்ச் 30–

வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களையும் +92-xxxxxxxxx என்ற முதலெழுத்துக்களுடன் பகிரவோ வேண்டாம்.

மேலும், தொலைத் தொடர்புத்துறை, தனது சார்பாக மக்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதோடு, இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் என்று தெரிவித்துக் கொண்டு மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதாவது, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் மோசடியாளர்கள், ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்டு, அந்த செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அவர்களின் மொபைல் எண்களின் இணைப்பைத் துண்டிக்கப்போவதாக அச்சுறுத்துவதாக பலரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

அதில், “சாதாரண மக்களை தொலைபேசி வாயிலாக அழைக்கும் மோசடியாளர்கள், தகவல் தொடர்புத் துறை என்று சொல்லிக்கொண்டு, உங்கள் மொபைல் எண்கள் சில சட்டவிரோத செயல்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தங்கள் மொபைல் எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்துகின்றனர்” என்று தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

புதிய இணைய தளம்

துவக்கம்

நாட்டில் மோசடி அழைப்புகளின் அச்சுறுத்தலைத் தடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, அண்மையில் ‘சக்சு’ என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களுக்குள் பெறப்பட்ட மோசடி அழைப்புகள், எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து மக்கள் இந்த தளத்தில் புகார் செய்யலாம். தகவல் தொடர்புத் துறையானது டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தை (டிஐபி) அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சந்தேகத்திற்குரிய மோசடி இணைப்புகள் பற்றிய தரவைப் பகிர வழிவகுத்துள்ளது.

இந்த தளங்களைத் தொடங்கும் போது, ​​தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், இணையதளம் (www.sancharsaathi.gov.in) தொடங்கப்பட்டதால், கிட்டத்தட்ட ரூ.1,008 கோடி மதிப்பிலான மோசடிகள் தடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் கால்களை (உதாரணமாக +92-xxxxxxxxxx) எடுக்கும்போது, அவற்றின் மூலம் மோசடியாளர்கள், மக்களை தங்களது சதிக்குள் சிக்க வைத்து, மிரட்டி, பணம் பிடுங்கும் பல்வேறு மோசடிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் ஏதேனும் வந்தால், அவர்களுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்கள்எதையும் பகிர வேண்டாம் என்றும், உடனடியாக இதுபோன்ற மோசடி எண்கள் குறித்து பிரத்யகேமாக துவங்கப்பட்டிருக்கும் இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *