செய்திகள்

வெளிநாட்டினர் வருகை: இந்திய அளவில் சென்னை விமான நிலையம் 3-வது இடம்

சென்னை, ஆக. 8–

வெளிநாட்டினர் வருகையில் இந்திய அளவில் டெல்லி விமான நிலையம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் தரைவழிப்போக்குவரத்து மட்டுமின்றி விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 2020 மார்ச் 23-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்த இந்திய அரசு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை மட்டும் இயக்க அனுமதித்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு 2022 மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை அளிக்க இந்திய அரசு அனுமதியளித்தது. அந்த வகையில், ஜனவரி முதல் மே மாதம் வரை இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களின் தரவுகளை இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு ஜனவரி முதல் மே வரை சுற்றுலாவாக 16 லட்சத்து 1,381 வெளிநாட்டினர் வந்துள்ளனர்.

டெல்லி முதலிடம்

மேலும், ஜனவரி முதல் மே வரை வந்த வெளிநாட்டினரில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் 25.57 சதவீதம், வங்கதேசத்தினர் 15.86 சதவீதம், இங்கிலாந்திலிருந்து 11.65 சதவீதம், ஆஸ்திரேலியாவிலிருந்து 6.10 சதவீதம், கனடாவிலிருந்து 5.70 சதவீதம் பேர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வருகையில் முக்கிய பங்கு வகித்த முதல் 15 விமானநிலையங்களில் டெல்லி விமானநிலையம் 35.50 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் மும்பை விமானநிலையம் (14.58 சதவீதம்), 3-வது இடத்தில் சென்னை விமானநிலையம் (9.92 சதவீதம்), 4-வது இடத்தில் ஹரிதாஸ்பூர் விமானநிலையம் (7 சதவீதம்), 5-வது இடத்தில் பெங்களூரு விமானநிலையம் (6.06 சதவீதம்) உள்ளன.

மே மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் எண்ணிக்கையில் டெல்லி விமானநிலையம் 25.90 சதவீதத்துடன் முதலிடத்திலும், மும்பை (14.58 சதவீதம்) 2-வது இடத்திலும் உள்ளது. திருச்சி விமானநிலையம் 1.16 சதவீதம் என 13-வது இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.