செய்திகள்

வெளிநாடு ஏற்றுமதி பாதிப்பு: 3 கோடி தேங்காய்கள் தேக்கம்

பொள்ளாச்சி, மே 13–

வெளிநாடுகளுக்கு 80 சதவிகித ஏற்றுமதி குறைந்துள்ளதால் பொள்ளாச்சி தென்னந்தோப்புகளில் மூன்று கோடி தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன.

பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்தத் தொழிலை நம்பி விவசாயிகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் தேங்காய் உற்பத்தி அதிகரித்தது. தற்போது வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி இல்லாததால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேக்கம் ஏன்?

இதுகுறித்து பேசியுள்ள தேங்காய் மொத்த வியாபாரிகள், “பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து வாரந்தோறும் 30 கன்டெய்னர்களில் 900 டன் தேங்காய்கள் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து துபாய்க்கு கப்பல் மூலம் ஏற்றுமதி ஆகிறது. லாரிகளில் மராட்டியம், டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி 80 சதவிகிதம் வரை குறைந்து விட்டது. ஒரு கன்டெய்னரில் 30 டன் தேங்காய் ஏற்றி செல்ல ரூ.72,000 வாடகை இருந்தது. தற்போது வாடகை ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது. வாரத்தில் 40 முதல் 50 கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது 5 கன்டெய்னர்களில் மட்டும் ஏற்றுமதி ஆகிறது.

இதனால் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் சுமார் மூன்று கோடி தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. ஒரு தேங்காய் ரூ.9-க்கு விற்பனை ஆகிறது. தேங்காய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், கொப்பரை தேங்காய்க்கு விலையை நிர்ணயம் செய்யவும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.