செய்திகள்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை, ஜூலை 20–

தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டிபாளையத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில், வரமூத்தீஸ்வரர் கோயில் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இரண்டு, மூன்று இடங்களில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை மீட்டு வரவும், ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கவும், ஏடிஜிபி மற்றும் துறை எஸ்பி ஆகியோரோடு இந்து அறநிலையத்துறை ஆலோசனை செய்துள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.600 கோடி நிலம் மீட்பு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 70 நாட்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் பராமரிப்பு, சொத்துகளை பாதுகாத்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி இந்து அறநிலையத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில்களுக்கு சொந்தமான 30 யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு மாதம் இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் இல்லாத அனைத்து கோயில்களுக்கும் அர்ச்சகர்கள் மற்றும் காவலாளிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *