சென்னை, பிப். 1–
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மத்திய அரசின் அனுமதி பெறாமல் சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூபாய் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த பத்மநாபன் என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சாய்புதின் (51) என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், சம்பளம் ரூ. 1 லட்சம் என ஆசை வார்த்தைகள் கூறி முன் பணமாக ரூ.1,25,000 பணம் பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணையில் எதிரி சாய்புதின் என்பவர் 2023ம் ஆண்டு செயல்பாட்டில் இல்லாத கன்சல்டன்சி பெயரில் மத்திய அரசின் உரிமம் பெறாமல் போர்ச்சுகல், இத்தாலி, கேமேன் தீவு, போலந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 193 நபர்களிடம் பணம் ரூ.2 கோடிக்கு மேல் வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் பெற்று, வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவினர் சாய்புதினை கைது செய்து அவரிடமிருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் மற்றும் போலியான நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை மேற்கொண்ட வேலை வாய்ப்பு மோசடி பிரிவினரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.