செய்திகள்

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தமிழ் கற்பிக்க பரப்புரை கழகம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, செப்.25-–

வெளிநாடுகளில் தமிழ் எழுதவும், பேசவும், படிக்கவும் மறந்த தமிழர்களுக்கு மொழியை கற்பிக்க தமிழ் பரப்புரை கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது, எனவே, நாம் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இதன்படி தமிழ் இணைய கல்விக்கழகத்தின் தமிழ் பரப்புரை கழக தொடக்க விழா, தமிழ் இணைய கல்விக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் -கற்பித்தலுக்கான இதர சேவைகள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

24 மொழிகளில்…

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி இந்த செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். அயலக மாணவர்கள் தமிழ் கற்பதற்காக 24 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாடப்புத்தகங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சுகந்தி, விஜய் அசோகன், அனிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-–

தமிழர்கள் 30–-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், 60–-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும், பேசவும், படிக்கவும் மறந்த தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ் சொல்லி கொடுப்பதற்குதான் தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டு உள்ளது.

உணர்வால், உள்ளத்தால், தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். மொழிக்கு மட்டும்தான் இப்படி அன்பால் இணைக்ககூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டு உள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்கின்ற உயரிய நோக்கம் தான் இதற்கு காரணம்.

தமிழ் பரப்பும் கழகம்

தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றது முதல் பொருணை அருங்காட்சியகம் அமைத்தது வரை நாங்கள் தமிழுக்காகவும், தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதற்காகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் பலப்பல. சில நாட்களுக்கு முன்னால் தமிழகம் வந்த அகில இந்திய தலைவர் ஒருவர் (பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா) தமிழுக்கு தி.மு.க. என்ன செய்தது என்று கேட்டுவிட்டு போய்விட்டார்.

தமிழுக்கு என்ன செய்யவில்லை என்பதுதான் அவருக்கு நம்முடைய பதிலாக இருக்க முடியும். இப்படி ஓர் ஆண்டு காலத்தில் தமிழ் தொண்டு ஆற்றிய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இதற்கு மகுடமாகத்தான் தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழின் புகழ் பாடும் கழகம் அல்ல. பேசிக் கழிக்கும் கழகம் அல்ல. தமிழை உலகம் எங்கும் பரப்பக்கூடிய கழகம்.

இன்று தொடங்கப்பட்டுள்ள தமிழ் பரப்புரை கழகத்தின் மூலமாக 22 நாடுகள் மற்றும் 20 மாநிலங்களை சார்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் முதல் கட்டமாக பயனடைய இருக்கிறார்கள். இதனை மேலும் உலகம் முழுவதும் வாழக்கூடிய பல ஆயிரக்கணக்கான அயலக தமிழ் மாணவர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய பணியை தமிழ் இணைய கல்விக்கழகம் மூலமாக தமிழக அரசு மேற்கொள்ளும்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் கனவை, செம்மொழித்தகுதி பெற்று தந்துள்ள கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் நாளாக இது அமைந்துள்ளது

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *