சிறுகதை

வெளிச்சம்! – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

ஊரை விட்டு சற்று ஒதுங்கியிருந்தது அந்த குடியிருப்பு. கார்பரேஷன் அடிப்படை வசதிகள் கூட சரிவர செய்யவில்லை. பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் அங்கே கூரை வீடுகளில் வசித்தார்கள். அந்த இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்டப்போகிறேன் என்று விநாயகம் சொன்னபோதே குடும்பத்தினர் எல்லோரும் எதிர்த்தார்கள்.

ஆனால் விநாயகம் தான் சல்லிசாக வருகிறது என்று அங்கே மனை வாங்கினார். அந்த பகுதி ஆட்களை கொண்டே வீட்டைக் கட்டினார். எல்லாம் சிக்கனமாக இருக்க வேண்டும் அவருக்கு. குடிக்கும் தண்ணீரில் இருந்து எல்லாவற்றிலும் சிக்கனத்தை கடைபிடிப்பார். எதையுமே வீணாக்கக் கூடாது தெரியுமா? நமக்கு அதிகமா தெரியறது அடுத்தவனுக்கு அடிப்படையாக் கூட இருக்கலாம் என்று சொல்லுவார்.

இத்தனை பெரிய வீடு கட்டிவிட்டார். மின்சாரத்தை சிக்கனமாக்குகிறேன் என்று எல்.இ. டி பல்புகளை பொருத்தினார். அது கூட பரவாயில்லை பொறுத்துக் கொள்ளலாம். மணி எட்டரை ஆனால் போதும் வெளி விளக்குகளை அணைத்துவிடச் சொல்லுவார். கேட்டால் எதற்கு வீணாக எரியவேண்டும் என்பார்.

சுற்றுப்புறம் சரியில்லையே! பூச்சி பொட்டுக்கள் அண்டாது இருக்க வேண்டும் திருடர்கள் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டாமா? விளக்கு எரிந்தால் பாதுகாப்புத்தானே! வாசல் விளக்கை இரவு முழுவதும் எரியவிடக்கூடாதா? என்றால் ஒத்துக் கொள்ள மாட்டார்.

நமக்கு மட்டும் தான் திருடர்களும் பூச்சி பொட்டுக்களும் வருமா? பக்கத்திலே குடிசையிலே வாழ்கிறார்களே அவர்களுக்கு வராதா? அவர்கள் எப்படி பயமின்றி இருக்கிறார்கள்? நம் வீட்டுக்குள் எதுவும் நுழையாது. நுழையும் போது பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

அவர் பிடித்தால் பிடிவாதம்தான்! யார் சொன்னாலும் கேட்க மாட்டார். அதனால் அவர் போக்கிலேயே விட்டு விட்டார்கள். அவரும் சிக்கனமாக இருக்கிறேன் என்று எட்டரைக்கெல்லாம் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிடுவார். அதே சமயம் அதிகாலையில் எழுந்துவிடுவார்.

அன்று காலையிலேயே ஓர் எலக்டீரிசியனை கூட்டி வந்திருந்தார் விநாயகம். இப்ப எதுக்கு எலக்டீரிசியன்? அனைவருக்கும் கேள்வி எழுந்தது ஆனால் கேட்கவில்லை.

மளமளவென்று வேலைகள் நடந்தது. தெருவாசலில் ஒரு பெரிய போஸ்ட் நட்டு அதில் மிகப்பெரிய எல்.இ. டி பல்பு ஒன்று போட்டுவிட்டார்.

எட்டுமணிக்கே விளக்கு அணைக்கிறதுக்கு எதுக்கு இத்தனை பெரியபல்பு? என்று எல்லோரும் நினைத்துக் கொண்டாலும் ஒருவரும் வாய் திறக்கவில்லை.

அன்று மாலைப் பொழுதில் அந்த புதிய விளக்கொளியில் தெருவே பிரகாசிக்க அப்பகுதி குழந்தைகள் அவர் வீட்டு வாசலில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தனர். மணி எட்டரையைக் கடந்து ஒன்பது கூட ஆனது. விநாயகம் விளக்கை அணைக்கவில்லை.

“என்னப்பா! லைட்டை அணைக்கலையா? மணி ஒன்பது ஆச்சே!”

“இந்த பசங்க படிச்சு முடியறவரைக்கும் விளக்கு எரியட்டும்”.

“என்னப்பா சொல்றீங்க? வீணா கரண்ட் செலவாகுது? பில் எகிறப் போவுது?”

“அதெல்லாம் எனக்கும் தெரியும்! இந்த பசங்களுக்காகத்தான் பெரிய லைட்டே போட்டேன். அந்த காலத்துல தெருவிளக்குள படிச்சு உத்தியோகத்துக்கு வந்துதான் உங்களை எல்லாம் காப்பாத்தினேன். இந்த பசங்களும் வீட்டுல விளக்கு இல்லாம படிக்கிறதுக்கு சிரமப் படறதை நேத்துதான் பார்த்தேன். நம்ம தெரு விளக்கு வெளிச்சத்துல ஓரமா நின்னு ஒரு பையன் வீட்டுப்பாடம் எழுதறதை பார்த்ததும் பழைய நினைவு வந்துருச்சு.

அதனாலதான் காம்பவுண்ட் ஓரம் விளக்கு போட்டு பசங்களுக்கு ஓர் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன். இதனால நான் ஒண்ணும் ஏழையாகிட மாட்டேன். பாவம் ஏழைப் பசங்களுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி இது. உனக்கு புரியாது நீ போ! நான் பசங்க படிச்சு முடிச்சதும் லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்கறேன்! “என்றார்.

அவருக்குள்ளும் இப்படி ஓர் மனிதர் இருப்பது அந்த விளக்கொளியில் வெளிச்சப் பட்டது அவர் மகனுக்கு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *