போஸ்டர் செய்தி

வெற்றி பெற்ற 567 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.4¼ கோடி பரிசு தொகை

சென்னை, மார்.6–

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 567 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 4 கோடியோ 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பரிசுகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 2018–19–ம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சேர்ப்பதற்கான திட்ட தொடக்க விழா பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி முன்னிலை வகித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் பேசுகையில்,

தமிழக அரசு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாநில அளவிலும், இந்திய அளவிலும், பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறுவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது. மிஷன் இன்டர்நேஷனல் மெடல் ஸ்கீம் திட்டத்தில் ஒரு வீரருக்கு ஆண்டொன்றுக்கு விளையாட்டுப் பயிற்சி மேம்படுத்துவதற்கு ரூ. 10 லட்சம் வரை அரசு வழங்க உள்ளது.

இத்திட்டத்தில் இன்று 37 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சேர்க்கை ஆணை அமைச்சர்கள் வழங்குகிறார்கள். இத்திட்டத்தில் 5 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு பல்வேறு வகையில் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்தவகையில், விளையாட்டுத் துறை மேலும் சிறப்பு பெற்று பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் சந்திர சேகர் சாகமூரி வரவேற்புரை ஆற்றினார்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை வகித்து பேசினார்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 37 நபர்களுக்கு ‘மிஷன் சர்வதேச பதக்கம்’ திட்டத்தில் (Mission International Medal Scheme) சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.4¼ கோடி பரிசு

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 189 நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 189 நபர்களுக்கு இரண்டாவது பரிசாக ரூ.75,000–மும் மற்றும் 189 நபர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.50,000–மும் ஆக மொத்தம் ரூபாய் 4 கோடியே, 24 லட்சத்து 75 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் மாநில அளவிலும் போட்டி நடத்தப்பட்டு, அதில் 566 நபர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.

இந்திய அளவில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் விளையாட்டில் இந்திய அளவில் கவனம் பெறுவதற்கும், தமிழகத்தில் இருக்கிற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சர்வதேச தரத்தில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கினை புரட்சித்தலைவி அம்மா ஏழே மாதத்தில் கட்டி முடித்தார்.

அதேபோல் 2004–ம் ஆண்டு விளையாட்டுத் துறைக்கென்று தனியாக கல்லூரியினை நிறுவினார். அம்மாவின் தொலைநோக்கு சிந்தனையும், தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கம் பெறுபவர்களுக்கு அதிக அளவில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி ஊக்குவித்தார்.

பணி ஆணை

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படுகின்ற தமிழக அரசு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் வழங்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் அறிவித்தார். அதற்கேற்ப சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018–ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் அ. தருணுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திலும், 2018-ஆம் ஆண்டு வாள்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சி.ஏ. பவானிதேவி மற்றும் 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதற்காக பாய்மர வீரர் லஷ்மண் ரோகித் மரடப்பா ஆகியோருக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திலும் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை முதலமைச்சர் வழங்கினார்.

1000 பேர் தேர்வு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக 1000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி மற்றும் அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதற்கு 30 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஒவ்வொரு விளையாட்டரங்கத்தினையும் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு தேவைக்கேற்ப பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

விளையாட்டு அரங்கங்களில் மின் சிக்கனத்தை கருத்திற் கொண்டு சோலார் மின்வசதி அமைப்பதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

+1 மற்றும் +2 பயிலும் மாணவர்கள் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. +2 படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைத்து வகையிலும் திறனுடன் படித்து உயர்வதற்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களுடைய உடற்தகுதியை மேம்படுத்தி சிறப்பாக பயிற்சி எடுத்து, தாங்கள் ஈடுபடுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் மேலும், மேலும் உயர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில், உலக வரைபடத்தில் தமிழ்நாடு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கினை புரட்சித்தலைவி அம்மா உருவாக்கித் தந்தார்.

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படுகின்ற தமிழக அரசு, விளையாட்டுத் துறையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. முதலமைச்சர் கோப்பையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கபாடி விளையாட்டு வீரர்கள் ரூபாய் 12 லட்சம் பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளார்கள். விளையாட்டில் ஈடுபடுகின்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சிறப்பு பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் கே. புகழேந்தி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *