சிறுகதை

வெற்றி நமக்கு தான் | ராஜா ராமன்

தூண்கள் நிறைந்த அந்த திண்ணையில் ஒரு மூலையில் சிட்டுகுருவிகள் கீச்… கீச்… என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

அதைத்தாண்டி உள்ளே சென்றால்….

முற்றத்தில் ஒரு தூணில் முகம் பார்க்கும் கண்ணாடியை சாய்த்துக்கொண்டு சோப்பு நுரை நிறைந்த தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து சவரம் செய்து கொண்டிருந்தார் ராசாமணி.

குருவிகளின் சத்தமும் வீட்டின் நிசப்தமும் கலைந்து யாரோ உள்ளே வரும் சத்தத்தை உணர்ந்த ராசாமணி முன்னால் சாய்ந்திருந்த கண்ணாடியைப் பார்த்தார். அதில் தன் முதுகிற்கு பின்னால் நின்ற ஒரு உருவத்தின் கால்பகுதி தென்பட்டது. உடனே திரும்பினார் ராசாமணி.

அங்கே….

அழகேசன் நின்று கொண்டிருந்தான்.

கொஞ்சம் படப்படப்பாகவும் சத்தமாகவும் பேசும் இயல்புடையவன் அழகேசன். அவன் ராசாமணியை பார்த்து…

‘‘அண்ணே… மனுதாக்கல் பண்ணலயா…? ’’ என்று சத்தமாக கேட்டான்.

இனி இந்த வீட்டில் அமைதிக்கு வேலையில்லை. நாம் போய் உணவைத் தேடுவோம் என்று பட.. பட… என தன் கூட்டிலிருந்து வெளியே பறந்து சென்றன குருவிகள்.

‘‘எதுக்குடா கேக்கிறாய்…?

‘‘அண்ணே வேட்பு மனுதாக்கல் நாளையோட முடியுதாமே…’’

‘‘ஆமாடா… அதுக்கென்ன இப்ப… என்று சொல்லியபடியே தண்ணீரில் முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தார் ராசாமணி.

‘‘அப்ப ஏங்கண்ணே நீங்க இன்னும் மனுதாக்கல் பண்ணல…?. டீக்கடையில நீங்க இந்த எலெக்சன்ல நிக்க போறதில்லைன்னு பேசிக்கிறாங்க…’’

‘‘யாருடா சொன்னா …? என்று முகத்தை துடைத்த துண்டை தோளில் போட்டுக்கொண்டு அழகேசனைப் பார்த்து கேட்டார் ராசாமணி

‘‘பிரசிடென்ட் வீரமணி தான் அண்ணே… அவர்.. மனுதாக்கல் பண்ணிட்டாராம்…ஆனா.. நீங்க மனுதாக்கல் பண்ணமாட்டிங்கனு அவுங்க ஆளுகளை வச்சுகிட்டு சொல்லி உங்கள கிண்டல் பண்ணி சிரிச்சுக்கிட்டு இருந்தாரு…’’

‘‘டே… நான் ஒன்னும் பயந்தாங்கொள்ளி இல்லடா… எலெக்சன்ல நிக்காம இருக்க.. வீரமணி என்னையவா கிண்டல் பண்றான். இந்த தடவைப்பாரு.. அவன் நூறு ஓட்டுதான் வாங்குவான்…’’ என்று ராசாமணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு

‘‘அப்ப ஏன் நீங்க மனுதாக்கல் பண்ணல..? என்று திரும்பவும் கேட்டான் அழகேசன்.

‘‘இல்லடா நாளைக்கு தான் பண்ணனும். ஏன்னா… போன தடவ வெள்ளிக்கிழமை பண்ணுனோம். தேத்துபோயிட்டோம் . அதனால வெள்ளிக்கிழமை நமக்கு ராசியில்ல. நாளைக்கு சனிக்கிழமை; மனுதாக்கல் பண்றோம் . பல ஓட்டு வித்தியாசத்தில அந்த வீரமணியை தோக்கடிக்கிறோம்’’ என்று கூறிவிட்டு குளிக்க மிடுக்காக நடந்து சென்ற ராசாமணியை பார்த்து கொண்டே இருந்தான் அழகேசன்.

75 வயதாகும் ராசாமணி ஒரு ஓய்வு பெற்ற நீதிமன்ற பணியாளர் .

கருத்து வேறுபாட்டால் தன் குடும்பத்தை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார் . விவசாயத்தின் வருமானமும் பென்சன் பணமும் வருவதால் பணப் பிரச்சனையின்றி வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த மூன்று முறை பஞ்சாயத்து தலைவருக்குப் போட்டியிட்டு தொடர் தோல்வியை சந்தித்தவர். தேர்தலில் போட்டியிடுவதும் தேர்தலைப் பற்றி பேசுவதும் தான் இவருக்கு பொழுதுபோக்கு .

ராசாமணியின் அரசியல் கொள்கைக்கு பேரொளியாக இருப்பது அவரின் உதவியாளர் அழகேசன் தான். இந்த கிராமத்தில் நல்லது கெட்டது என எதுக்கு சென்றாலும் அழகேசன் இல்லாமல் வெளியே செல்லுவதில்லை ராசாமணி . அழகேசனும் இவருக்காக எல்லா உதவியும் செய்வான். அதுவும் தேர்தல் நேரமென்றால் சொல்லவே வேண்டாம் . மிகவும் பரபரப்பாக பம்பரம் போல் சுத்திச் செயல்படுவான்.

சனிக்கிழமை காலைப்பொழுதில்

வீட்டில் எங்கும் ஊதுபத்தி வாசமும் மணி அடிக்கும் சத்தமும் கேட்டது. பூஜை அறையிலிருந்து பக்தி மயத்துடன் வெளியே வந்தார் ராசாமணி . அவர் வருகைக்காக காத்திருந்த அழகேசன்.

‘‘அண்ணே… போகலாமா….?

‘‘போகலாம்டா. நம்ம ஆளுக எல்லாம் வந்துட்டாங்களா…?’’

‘‘வந்துட்டாங்கண்ணே….’’

‘‘டேய்… கண்ணுசாமி, முருகானந்தம் ….’’ என்று பெயர்களை ராசாமணி வரிசைப்படுத்தும் போதே

‘‘அண்ணே… எல்லாரும் வந்திட்டாங்க’’ என்று சொன்னான் அழகேசன்.

மனுத்தாக்கலுக்குத் தேவையான ஆவணங்களையெல்லாம் தன் பேக்கில் எடுத்து வைத்துக் கொண்ட ராசாமணி அந்த பேக்கை அழகேசன் கையில் கொடுக்கும் போது உத்திரத்தில் உள்ள பல்லி ச்சு…. ச்சு…. என சத்தமிட்டது.

அண்ணே…… வெற்றி நமக்கு தான். சகுணம் அருமையா இருக்கு ’’ என்று சொல்லி ராசாமணியை குதூகலப்படுத்தினான் அழகேசன். பிறகு புல்லட் அருகே சென்று தன் தோளிலிருந்த துண்டை எடுத்து ராசாமணி உக்காரும் முன் சீட்டையும் தான் உக்காரும் பின் சீட்டையும் துடைத்து விட்டு ராசாமணியை பார்த்த அழகேசன்.

‘‘அண்ணே கிளம்பலாம்; நல்ல நேரம் முடியப் போகுது’’ என்று அழகேசன் சொன்னவுடன் ராசாமணி தன் அருகில் நின்றுகொண்டிருந்த மற்ற சகாக்களையும் கிளம்ப சொல்லிவிட்டு படியிலிருந்து இறங்கி வந்து புல்லட்டில் ஏறி அமர்ந்து புல்லட்டை ஸ்டார்ட் செய்தார்.

பிறகு பின் சீட்டில் அழகேசன் அமர்ந்துகொண்டான். வண்டியும் கிளம்பியது. ராசாமணியின் சகாக்களும் பின் தொடர்ந்தனர்.

புல்லட்டை ஓட்டியபடியே ராசாமணி அழகேசனை கேட்டார்

‘‘டே… தேர்தல் ஆபிஸ்ல எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டியா …..?

‘‘அண்ணே… எல்லாத்தையும் செஞ்சிட்டேன். நீங்க அந்த இடத்துக்கு போன உடனே பாருங்க’’ என்று எதிர் காற்றில் ஆடிய தன் முடியை கோதிய படியே சொன்னான் அழகேசன்.

பிறகு தங்கள் பின் தொடர்ந்த சகாக்களை பார்த்து நீங்க எல்லாரும் முன்னால போய் நான் சொன்ன எல்லா ஏற்பாட்டையும் சிறப்பா பண்ணுங்க என்று சைகை மூலம் சொன்னான் அழகேசன்.

அழகேசனின் உத்தரவை பெற்ற சகாக்கள் தங்களின் பைக்கின் வேகத்தைக் கூட்டி ராசாமணியின் புல்லட்டை முந்தி சென்றனர்.

தேர்தல் ஆபிஸை அடைந்த சகாக்கள் அனைவரும் தேர்தல் ஆபிஸ் வாசலில் கையில் மாலையுடன் தரையில் சரவெடியை பரப்பி வைத்து ராசாமணியின் வருகைக்கு கார்த்திருந்தனர். அந்த வீதியின் முகப்புப் பகுதியைப் பார்த்தபடியே ராசாமணியின் புல்லட்டை எதிர்பார்த்திருந்தனர்.

டப்… டப்… புல்லட் சத்தம் கேட்டவுடன் சரவெடிசத்தம் அந்த வீதியை அலரவிட்டது.

சரவெடிசத்தம் முடிந்தவுடன் எஞ்சிய புகையை விலக்கிக் கொண்டு ராசாமணியின் புல்லட் வந்து மெதுவாக நின்றது.

புல்லட்டிலிருந்து இறங்குவதற்கு முன்னாலேயே ராசாமணியின் தோளில் மாலைகள் குவிந்தன. அப்போது அவரின் பின்னால் அமர்ந்திருந்த அழகேசன் ராசாமணியின் காதருகே வந்து

‘‘அண்ணே நம்ம ஏற்பாடு எப்படி..? இதை நம்மளை எதிர்த்து நிக்கிற அந்த வீரமணி பாத்தாருனா… சும்மா அறண்டுவாருள்ள…’’ என்று உலகத்தில் யாரும் செய்யாத வேலையை செய்தது போல் கம்பீரமாக பேசினான் அழகேசன்.

வரவேற்பு நிகழ்வுகளை முடித்து விட்டுபின்னர் அனைவரும் தேர்தல் ஆபிஸில் வேட்புமனுக்கள் பெறும் அதிகாரி அறையை நோக்கி நடந்து சென்றனர்.

போகும் வழியில் சில பேர் கை அசைவின் மூலம் ராசாமணிக்கு வணக்கம் செலுத்தினர். அதைத் தலையை ஆட்டியபடியே பெற்றுக்கொண்டார் ராசாமணி . பின்னர் அதிகாரி அமர்ந்திருந்த அந்த அறையின் உள்ளே நுழைந்தார் .

அதிகாரி அவரை பார்த்தவுடன் புன்னகையைக் காட்டி

‘‘சார் நல்லா இருக்கீங்களா….’’ என்றார்

‘‘நல்லாயிருக்கேன் கேசவா..’’ என்று சொல்லிவிட்டு அந்த அதிகாரியின் எதிரில் உள்ள மரச்சேரில் அமர்ந்து கொண்டார் ராசாமணி.

அவருக்கு பின்னால் அழகேசனும் மற்றவர்களும் நின்றுகொண்டிருந்தனர்.

‘‘சார்… எல்லாம் பேப்பரும் இருக்குல? என்று கேட்டவுடன் அழகேசன் முந்திக்கொண்டு

‘‘சார் ..எங்க அண்ணங்கிட்ட எல்லாம் அக்குயூரேட்டா இருக்கு.. எங்க அண்ணனுக்கு இது என்ன புதுசா? உங்களுக்கு மனுவுல ஏதும் சந்தேகம் இருந்தா எங்க அண்ணகிட்ட கேளுங்க’’ என்ற சொன்ன அழகேசனை கோபமாக முறைத்து பார்த்தார் அதிகாரி.

பிறகு ராசாமணியை பார்த்த அதிகாரி

‘‘சார்.. உங்க ஆளுகல எல்லாம் கொஞ்சம் வெளியில இருக்க சொல்லுங்க. இல்லைனா வேலை கொஞ்சம் தாமதமாகும்’’ என்றார் அதிகாரி

‘அழகேசா… நம்ம ஆள எல்லாம் கூட்டிட்டு கொஞ்சம் வெளில போ…’’ என்று ராசாமணி சொன்னவுடன் அழகேசனும் மற்றவர்களும் அதிகாரியை பார்த்து முணங்கியபடியே அந்த அறையை விட்டு வாசலுக்கு வந்தனர். கட்டிடத்தை தாங்கிப் விழுந்துவிடாமல் பிடிப்பது போல் சாய்ந்து பிடித்துக்கொண்டு நின்றனர்.

அதிகாரி அறையில்

தன் முன்னால் அமர்ந்திருந்த அதிகாரியின் மேஜையில் மனுதாக்கலுக்கு தேவையான அனைத்து ஆவணங்கனையும் எடுத்துவைத்தார் ராசாமணி . அதைச் சரிபார்த்த அதிகாரி

‘‘சார் முன்மொழிய மூனுபேரு இருக்காங்கள்ள?

‘‘இருக்காங்க கேசவா….

‘‘அதுபோல உங்க வேட்பு மனு ஓ.கே ஆச்சுன்னா … உங்களுக்கு சுயேச்சைச் சின்னம் ஒதுக்கும் போது அதே மூனு பேரும் திரும்பவும் முன்மொழிய வரணும் சார் இல்லைனா… மனு கேன்சல் ஆகிடும் ’’

‘‘எனக்கு எல்லாம் தெரியும் கேசவா…

‘‘இல்ல சார் உங்களுக்கு தெரிந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை சார்…’’ என்று சொல்லி விட்டு தன் பணியைத் தொடர்ந்தார் அதிகாரி.

‘‘டே… முருகானந்தம் – அந்த டீக் கடையில நிக்கிறது பிரசிடென்ட் வீரமணி மகன்தானே….? என்று கேட்டான் அழகேசன்.

முருகானந்தம், ‘‘ ஆமண்ணே…’’

டே இன்னைக்கு கடைசி நாள்ல அதான் நம்ம ராசாமணி அண்ணே மனுதாக்கல் பண்ணுராரா இல்லையானு பாக்க வந்துருக்கான் டா.

ஆமண்ணே… அவன் நம்மளையத்தான் பார்த்துக்கிட்டே இருக்கான்….

‘‘அது ஒண்ணுமில்ல இந்த தடவை கட்டாயம் அண்ணே ஜெயிச்சுருவாருன்னு ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கிராங்க. அதனால பிரசிடென்ட் வீரமணிக்கு தோல்வி பயம் வந்திருச்சுபோல என்றான் அழகேசன்.

வெளியில் தன்னுடன் நின்று கொண்டிருந்தவர்களிடம் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தான் அழகேசன்.

அந்த விசயத்தை காதில் கேட்ட ராசாமணி குரலை செருமியபடி சேரில் நல்லா நிமிர்ந்து கம்பீரமாக உட்கார்ந்துகொண்டார்.

சில நாட்களுக்கு பிறகு ……

வழக்கம் போல் வீட்டு திண்ணையில் உள்ள கட்டிலில் அமர்ந்த படியே ராசாமணியும் தரையில் அமர்ந்திருந்த அழகேசனும் மற்ற ஆட்களும் நடந்து முடிந்த ‘‘உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைக் காலை 8 மணிக்கு தொடங்கிறது’’ என்ற செய்தியை டி.வி. யில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ராசாமணிக்கு இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு,புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு கீழே படுத்திருந்த ‘‘அழகேசன்’’ கொறட்டையிட்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

அந்தத் தேர்தல் முடிந்து சில ஆண்டுகளுக்கு பிறகு……

வழக்கம்போல் தேர்தல் அலுவலகத்தை அடைந்த சகாக்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்தின் வாசலில் தரையில் சரவெடியை பரப்பி வைத்து ராசாமணியின் வருகைக்கு கார்த்திருந்தனர். அவர்கள் கைகளில் மாலைகள்.

சரவெடிசத்தம் அந்த வீதியை அலரவிட்டது.

புகையை விலக்கிக்கொண்டு ராசாமணியின் புல்லட் வந்து மெதுவாக நின்றது.

புல்லட்டிலிருந்த ராசாமணியின் தோளில் மாலைகள் குவிந்தன.

கடந்த நான்கு முறை தோற்றுவிட்டோம். இந்த முறை வெற்றி நமக்கு தான் என்ற நம்பிக்கையுடன் போய்க்கொண்டிருந்தனர் வேட்புமனு தாக்கல் செய்யும் அறையை நோக்கி ராசாமணியும் அழகேசனும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *