செய்திகள்

வெற்றி துரைசாமி மாயமான விவகாரம்: பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

சென்னை, பிப். 11–

வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவனது பெற்றோரிடம் இன்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார்.இந்த நிலையில் கார், கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் தஞ்ஜின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியை காணவில்லை. அவரை தேடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதோடு வெற்றி துரைசாமியின் குடும்பத்தாரிடம் நேற்று டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மாலை 5 மணிக்கு மேல் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடியாது என ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தான் விபத்து நடந்த இடத்தில் கிடைத்த ரத்த மாதிரிகள் யாருடையது என்பது தெரியவரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *