சிறுகதை

வெற்றியும் வாக்குறுதியும்! | * டிக்ரோஸ் *

அரசியலில் பழனிவேல் சாதித்த பலவற்றைப் பற்றி ஊடகங்களில் பார்க்கும்போது அவனது ஆரம்பப்பள்ளி கால நண்பன் சுரேஷ்க்கு தான் அளவு கடந்த மகிழ்ச்சி.

ஒரே பள்ளிக்குச் சென்றது சைக்கிளில் ஊர் சுற்றுவது, பிறகு ஒரே கல்லூரியில் படித்தது, சினிமா, ஷாப்பிங் என பொழுதை கழித்தது வரை ஒன்றாகவே இருந்ததால் இருவருக்கும் ஒருவரை பற்றி மற்றவருக்கு நன்றாகவே தெரியும்.

சுரேஷின் அம்மாவுக்கும் பழனியை மிகவும் பிடிக்கும், ‘டேய் உனக்கு நான் தான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன். காதல் கீதல் பண்ணக்கூடாது’ என்று 12–ம் வகுப்பு படிக்கும் போதே மிரட்டுவாள்.

‘சுரேஷ் நல்லா சாப்பிடு தம்பி’ என பழனியின் பெற்றோர் வாஞ்சையோடு உணவு பரிமாறுவார்கள்.

*

கல்லூரி கால கட்டத்தில் பழனிக்கு மாணவர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு நின்றபோது விண்ணப்பம் செய்தது முதல், ஓட்டு எண்ணிக்கையின் போதும் கூடவே இருந்தது சுரேஷ் தான். தோற்ற போது பழனிக்கு சோகம் உச்சத்தை அடைந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.

உடன் இருந்த நண்பர்கள் பலர் கூடவே அழுது பிறகு கத்தி கலாட்டா செய்த போதும் சுரேஷ் மட்டும் பழனியின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான்.

மாலை வீடு திரும்பிய பழனிக்கு மனதில் ஏதோ எரிமலை வெடிப்பது போல் இருந்தது. அப்பாவிடம் தனது தோல்வி பற்றி கூறியபோது மீண்டும் அழுதான்.

தோளில் தட்டிக்கொடுத்த அப்பா, ‘டேய், போய் சுரேஷிடம் பேசிக்கொண்டிரு. இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்’ என்று கூறினார்.

மழை சென்னை நகரின் சாலைகளை நீரோடைகளாக மாற்றிக் கொண்டிருக்க அந்த மாலையில் குடையை பிடித்தபடி மெல்ல சுரேஷ் வீட்டுக்கு சென்றான்.

‘இல்லம்மா, பசியில்லை’ என சுரேஷ் தன் அம்மாவிடம் சொல்லி ‘சுடச்சுட’ இருந்த தோசையை ஓரம் தள்ளி கொண்டு இருந்ததைப் பார்த்தான்.

‘என்னடா இந்த மழைல…’ என கேட்டபடி ஒரு துண்டை நீட்டினான்.

‘ஏண்டா பழனி சொற்ப ஓட்டில தோற்று போயிட்டியாமே. சுரேஷ் 130 தடவையாவது சொல்லி இருப்பான்’ என அம்மா கூறியபடி வரவேற்றாள்.

‘நீங்க காதலிக்காதீங்கன்னு சொன்னதால நாங்க இரண்டு பேரும் பொண்ணுங்க கூட நெருங்கிப் பழகுகிறதே இல்லையா. அவங்க ஓட்டுக்கள் அப்படியே எதிர்த்து நின்றவனுக்கு போயிடுச்சு… எல்லாம் உங்களால தான்… என கூறிட சுரேசும் பழனியும் கலகலப்பாக பேசியபடி, மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த தோசைகளை வரவர சாப்பிட்டு விட்டனர்.

*

சில ஆண்டுகளுக்குப் பிறகு பழனிவேல் தன் தந்தை வரதராஜனின் பெயரில் இருந்த ‘வ’வை கொண்டு ‘வாபா’ என்ற அடையாளம் கொண்டு அரசியலில் குதித்தான்.

முதலில் ஒரு பிரபல தனியார் நிர்வாகத்தில் சேர்ந்த போதே அங்கு ஊழியர்கள் நல சங்க அலுவல்களில் ஈடுபட்டான், அங்கு சக ஊழியர்களுக்காக குரல் கொடுத்தான். சில ஆண்டுகளில் பெரிய அரசியல் கட்சியின் தலைவர்களால் அழைக்கப்பட்டு அக்கட்சியின் பேச்சாளராக தமிழகம் எங்கும் வலம் வந்தான்.

சுயமாக ஒரு தொழில் துவங்கிய சுரேஷ், அவ்வப்போது பழனியை ‘நீ நிச்சயம் தேர்தலில் நின்றே ஆக வேண்டும்’ என்று வற்புறுத்துவான்.

அப்பா இறந்து விட்ட போது ஆயுள் காப்பீடு, சிறுசேமிப்பு எல்லாம் கை நிறைய வந்தாலும் அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விட்டு, தன் அரசியல் வாழ்விற்கு அதில் எதையும் செலவு செய்யக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தான்.

முதலில் சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய சென்ற போது பழனிக்கு பணத்தை கட்டியது சுரேஷ் தான்.

நேர்முக கலந்தாய்வின்போது, கட்சித் தலைமை கேட்டது, ‘உன்னால் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும்?

செலவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டதால் தலைமை வேறு ஒரு தொழில் அதிபருக்கு அவன் கேட்ட தொகுதியை கொடுத்து விட்டது.

அந்த தேர்தலில் கட்சி படுதோல்வியைத் தழுவியது, அந்த தொழிலதிபரின் தலையும் தப்பவில்லை!

*

தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், வயதான தாத்தாக்களின் கட்டுப்பாட்டில் அக்கட்சி இருப்பதால் இளைய தலைமுறை ஓட்டு வராமல் போனதாக கூறப்பட்டது.

சில நாட்களில் இரண்டாக பிரிந்ததில், இளைஞர்கள் இருந்த கட்சியாக தேசிய ஜனநாயக கட்சி, தே.ஜ.க. உருவானது. அதில் ‘வாபா’ முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்.

*

சில ஆண்டுகளில் வந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ‘வாபா’ தூத்துக்குடியில் அமோக வெற்றி பெற்று டெல்லி அரசியலில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்.

அவ்வப்போது சுரேஷ் போனில் பேசுவதோடு தொடர்பு நின்று விட்டது. சொந்த தொழில் சிறப்பாக நடைபெற்று வர சுரேசும் பிஸியாகிவிட்டதால் பழனியை சந்திக்க முற்பட்டதும் இல்லை.

*

காலச்சக்கர ஓட்டத்தில் தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டது, டெல்லி அரசியலில் தன் முழு கவனத்தை செலுத்தி கொண்டிருந்த வாபாவை தான் சென்னை மேயர் பதவிக்கு வேட்பாளராக தேஜக கட்சி அறிவித்தது.

எம்.பி.யான பிறகு காணவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு, நடைபெற்ற எதிர்பிரச்சாரங்களுக்கு பயந்து விடாமல் வாபாவுடன் கட்சி தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வாபாவை தோற்கடிக்க கடுமையாக எதிர்பிரச்சாரமும் டெல்லிக்குச் சென்று தலைமறைவாகி விட்டதாகவும் கதை கட்டிவிட்டு பிரச்சாரம் செய்தனர்.

ஒருநாள் சுரேஷிடமும் துண்டு பிரச்சார சீட்டு தரப்பட்டது. அதை எப்படியாவது பழனியிடம் கொடுத்து, சரியான விளக்கம் தந்து பிரச்சாரம் செய்ய ஆலோசனை தர நேரில் பார்க்கச் சென்றான்.

வீட்டில் இல்லை, அவர்களது கட்சி அலுவலகத்திலும் எந்த இடத்தில் இருப்பார் என்பதை சரியாகக் கூற முடியாமல் தவித்தனர்!

*

மறு வாரம் வெளிவந்த தேர்தல் முடிவுகளில் வாபாவின் வெற்றி தலைப்புச் செய்தியாக இருந்தது. டெல்லி தலைவர்கள் எல்லோரும் சிறிய மேயர் பதவி தான் என்றாலும் வாபாவின் தோழமைக்காக பங்கேற்க நேரில் வந்து விட்டனர்.

*

பழனியின் அம்மா ‘எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை, ஆனா நீ பதவி ஏற்பு விழாவுக்கு கண்டிப்பா போகணும்’ என கட்டளை பிறப்பிக்க, பதவி ஏற்பு நடைபெற இருக்கும் மைதானத்துக்குச் சென்றான்.

வீதியெங்கும் பழனியின் முகம் பளிச்சென்று தெரியும்படியான போஸ்டர்கள், அவன் கட்சியின் கொடிகள் ‘சரசர’வென பறந்துகொண்டு சுரேசை ‘வா வா’ என்று வரவேற்பது போல் இருந்தது.

தொலைதூரத்தில் தன் காரை நிறுத்த அனுமதித்த இடத்தில் நிறுத்திவிட்டு பெரிய பெரிய விஐபிகள் அணிவகுத்து வந்த நுழைவு வாயில் பகுதி அருகே சென்றபோது காவலர்களால் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டான்.

அந்த பகுதிக்கு காரில் வந்து இறங்கிய பழனிக்கு மாலைகள், பூச்செண்டுகள் குவியலாக அவன் முகத்தையும் மறைத்த வண்ணம் இருந்த நிலையில் சுரேஷின் பரவசத்திற்கு எல்லை ஏது!

‘வாபா வாழ்க’ என்ற கோஷம் வானம் வரை எதிரொலிக்க அழைத்து வரப்பட்ட காட்சியை ரசித்தான்.

பிறகு காவலர்கள் ராணுவ மிடுக்கோடு பழனியை ராஜகம்பீர வரவேற்பு கொடுத்து அழைத்துச் செல்ல துவங்கிய நேரத்தில் கட்சி தொண்டர்களின் வரவேற்பு கூச்சல்கள் நின்று அமைதி ஏற்பட்டது.

தன் அருகே வரும்போது சுரேஷுக்கு மனதில் தோன்றியது மறுபடியும் டெல்லிக்குச் சென்று தலைமறைவாகி விடக்கூடாது என்பது தான்.

அதே வேகத்தில் ‘டேய் பழனி’ என கூப்பிட கட்சித் தலைவர்களும் மூத்த அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியில் மவுனமாகி சுரேஷின் குரல் திசை நோக்கி பார்க்க ஆரம்பித்தனர்.

சுரேஷுக்கே தர்மசங்கடமாகி விட்டது. நாடே ‘வாபா’ என அன்பாக அழைக்க நான் மட்டும் ‘டேய் பழனியா’ என யோசித்தபடி தலைகுனிய, தோளை தட்டி ‘ஏய் சுரேஷ் என் கூட வாடா…’ என்று அழைத்தான் பழனி.

உடனிருந்த அதிகாரியிடம் என் அப்பாவிற்கு பிறகு ‘டேய் பழனி’ என அழைக்கும் என் நண்பனை என் கண் பார்வையில் தான் விழாவில் உட்காரவைக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தான்!

*

அன்று மாலை சுரேஷ் வீட்டில் தான் பழனிக்கு பிரத்யேக விருந்து, சுரேஷின் தாய் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்ற பிறகுதான் பழனியால் சகஜமாக எப்போதும் விரும்பி உட்காரும் அதே நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தான்.

‘டேய் மறந்திராம உன் வாக்குறுதியை மக்களுக்கு செய்து விடு…’ என்றான் சுரேஷ்.

‘சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப்பா, உனக்கு அப்புறம்தான் சுரேஷ் பண்ணிப்பானாம்…’ என்று அம்மா சொன்னதும்

‘அம்மா நீங்க தந்த வாக்குறுதியை மறந்து விடாதீர்கள்…’ என்று சொன்னது மேயர் பழனி.

‘ஏம்மா நீங்க தானே எனக்கு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன், சொன்னீங்க, நான் ரெடிம்மா’ என்றான் பழனி!

* * *

–decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *