ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
ஈரோடு, மார்ச் 2–
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சாரும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டில், அவருக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது.
எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதலமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.
ராகுல் காந்தி மீது தமிழக மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த வெற்றிக்காட்டுகிறது. மதச்சார்பற்ற கூட்டணி மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டதிற்கு நன்றி. நேரம் காலம் பார்க்காமல் அமைச்சர்கள், நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றினர். அமைச்சர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு கடுமையாக உழைத்தார்களா என தெரியவில்லை.
இந்த வெற்றிக்கு தி.மு.க. அமைச்சர்கள், கனிமொழி, உதயநிதி, கமல் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் மத சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.
தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அண்ணா தி.மு.க. கூறியுள்ளது. இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.