செய்திகள் நாடும் நடப்பும்

வெற்றிப் பாதையில் தமிழகம்: உறுதி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்


ஆர். முத்துக்குமார்


கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகம் தொழில்துறையில் வெற்றிநடை போட்டு வருவதை அறிவோம். கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘விஷன் 2023’ என்ற தொலைநோக்கு தொழில் திட்ட வரையறைகளை அறிவித்த நாளில் தனிநபர் வருமானத்தை உயர்த்துவேன் என்று உறுதி தந்து செயல்படுத்தினார்.

தற்போதைய தி.மு.க.வின் ஆட்சியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தை ஒரு ட்ரிலியன் டாலர் அதாவது ரூ.1000 கோடி பொருளாதாரமாக உயர்த்துவேன் என்று உறுதி தந்து, அதை தமிழகம் பெற உறுதியாகவே பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதலாய் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக்கு ஆக்கப்பூர்வமான ஊக்கத்தை தந்து வருவதை பார்த்தோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகளை ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த 5 தொழிற்பேட்டைகள் 7,200 பேருக்கு நேரடியாகவும் 15,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு முன்பு கூடிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக ரூ.1,25,244 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. புதிதாக சுமார் 75,000 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. திருவள்ளூர், தூத்துக்குடி, கங்கைகொண்டான், ஓசூர், தஞ்சாவூர் என்று தமிழ்நாடு முழுவதும் பரவலாகத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. என்பது இந்த முதலீட்டாளர் மாநாட்டின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். தொழில் வளர்ச்சி ஒரே இடத்தை மட்டும் மையமிட்டு இயங்காமல் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்படுவதற்கான திட்டமிடல்கள் வரவேற்புக்குரியவை. முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14 வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு முன்னேறி இருப்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் முதல்வர். அந்தப் பெருமிதம் தொடர வேண்டும்.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:–

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்திலிருந்து 3 வது இடத்தைப் பிடித்துள்ளது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகும். இது இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் ஆகும். இதற்குக் காரணமான அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள்.

இந்த அரசு பொறுப்பேற்று 5 மாநாடுகளை நடத்தி உள்ளோம். இது 6 வது மாநாடாகும். ஓராண்டில் 6 மாநாடுகளை நடத்துவதே சாதனை தான். அனைவருக்குமான, அனைத்து துறைக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி தொழிலதிபர்கள், உலக நிறுவனங்கள் வரத் தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடக்கிறது.

தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது, தெற்கு ஆசியாவில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்குவது, உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடையச் செய்வது, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும் சீராகவும் மேற்கொள்ளப்பட்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகிய 4 இலக்குகளை அடைய தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்காகும். இன்று 11 நிதிநுட்பத் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது வெறும் தொடக்கம் தான். மாநிலத்தை புதிய உரங்களுக்கு கொண்டுச் செல்ல உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நம் வளர்ச்சிப் பாதைகளை வகுத்தால் நமது போட்டித் தன்மை பன்மடங்கு அதிகரிப்பதுடன் உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்க முடியும்.

ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டில் எடுத்த முயற்சிகளால் இதுவரை 192 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2.20 லட்சம் கோடியாகும். பல துறையிலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலை தூத்துக்குடியில் கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவாகும்.

வளர்ந்து வரும் துறையான செமிகண்டக்டர் உற்பத்திக்கான உயர் தொழில்நுட்ப பூங்காவை ரூ.26,500 காடியில் தமிழகத்தில், அமைக்க ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழகம் பல்வேறு தொழில்துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் கண்ட துடித்துடிப்பை எந்த தொய்வுமின்றி மேலும் வளர்ச்சிகள் காண புதிய வேகத்துடன் செயல்பட வைத்து வருகிறார் ஸ்டாலின்.

உலக நாடுகள் தொழில்துறை வளர்ச்சிகளால் தான் சமீபத்து பொருளாதார வீழ்ச்சிகளில் இருந்து மீண்டு வெற்றிப்பாதையில் பயணிக்க முடியமென கூறி வரும் நேரத்தில் தமிழகத்தின் வளர்ச்சிகள் உலக பொருளாதார நிபுணர்களை மனம் திறந்து பாராட்டி வருகிறது. அதையே தங்கள் நாடுகள் பின்பற்ற வேண்டிய நல்உதாரணம் என கூறி பாராட்டுகிறார்கள்.

தேசிய அளவில் முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலம் தமிழகம் என்ற பட்டியலில் 3 வது இடத்துக்கு முன்னேறி விட்டது. முதல்வர் ஸ்டாலினின் முயற்சிகளால் விரைவில் முதலிடத்தை பிடிக்க தயாராகிறது தமிழகம்!


Leave a Reply

Your email address will not be published.