செய்திகள்

வெறுப்புணர்ச்சி காரணமாக கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

Makkal Kural Official

ஒட்டாவா, டிச. 16–

கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு உணர்ச்சி காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது.

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு தெரிவித்து, இந்தியா மீது குற்றம் சுமத்தியதால் இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டு மக்கள் அல்லது காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விசாக்கள் வழங்குவதை இந்தியா மறுக்கிறது என கனடா ஊடகத்தில் செய்தி வெளியாகின.

இதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பில் கடந்த வாரத்தில் மட்டும் கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

கனடா ஊடகத்தில் வெளியாகும் செய்தி, இந்திய இறையாண்மை விஷயத்தில் வெளிநாட்டு தலையீடு போன்றது. இந்தியா பற்றி அவதூறு தகவல்களை கனடா ஊடகங்கள் தெரிவிப்பதற்கு இது மற்றொரு உதாரணம். இந்திய விசா வழங்குவது நமது இறையாண்மையுடன் தொடர்புடைய செயல்பாடு. இந்திய ஒற்றுமையை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு விசா மறுப்பது எங்களின் சட்டப்பூர்வ உரிமை.

கனடாவில் இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது கொடூரமான சோகம்.

இந்தியர்கள் எச்சரிக்கை

இந்த சம்பவங்கள் குறித்த முழு விசாரணைக்காக, அங்குள்ள அதிகாரிகளுடன் நம் துாதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு தேவையான உதவியை, கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்கள் செய்கின்றன. கனடாவில் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் பாதுகாப்பு குறித்து கனடா அதிகாரிகளிடம் நம் தூதரக அதிகாரிகள் கவலையும், அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ரந்திர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *