விருதுநகர், ஆக. 30–
வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இவை அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.