செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி–3 – வெப் 3.0: தோற்றத்தின் காரணங்கள்!


– : மா .செழியன் :-


வெப் 3.0 என்பது இணையத்தின் அடுத்த தலைமுறையாகும். இது அதிக புத்திசாலித்தனமான, பரவலாக்கப்பட்ட மற்றும் அனைவருக்குமான மையமாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வெப் 2.0 இன் பல சிக்கல்களைக் களைய முயற்சிக்கிறது. இதுவரையான இணைய பரிமாற்றங்களின் பதிவேடுகள் (NETWORK SERVER) அதிகாரம் அனைத்தும் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. பயனர்களாகிய பொதுமக்களின் தரவுகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவும், தேவைப்படும் நிலையில் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த குறைகளை களைவதற்காக உருவாக்கப்பட்டதே வெப்–3.0 எனும் பரவலாக்கப்பட்ட தொடர் பதிவேடுகள் எனும் பிளாக்செயின் தொழில்நுட்பம் (Block Chain technology). இதில் தரவுகள் யாரோ ஒருவரை மையப்படுத்தி இருக்காது. பரவலாக்கப்பட்ட தொடர் பதிவேடு (DECENTRALIZED) முறையில் பிளாக்செயின் தொழில்நுட்பம் செயல்படுவதால், ‘வெப் 3.0’ முறைமையானது, எந்தவொரு மைய சேவையகத்தையும் நம்பியிருக்காது.

கிரிப்டோ கரன்சி ஏன்?

2008 கால கட்டத்தில் நிகழ்ந்த இணைய குற்றங்கள் மற்றும் இணையத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, புதிய பிளாக்செயின் தொழில்நுட்பம் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், அதனை வீரியமாக உருவாக்கி பொதுவெளியில் சேர்த்தவர் சதோஷி நெகமட்டோ (Satoshi naka moto) என்றே சொல்ல வேண்டும். இவர்தான் ‘கிரிப்டோ கரன்சி (CRYPTO CURRENCY) எனும் டிஜிட்டல் நாணயத்தை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கி முதன்முதலில் வெளியிட்டவர். சதோஷி நகமட்டோ என்பவர் தனி நபரா, குழுவா, நாடா என்று எந்த விவரமும் இதுவரையில் வெளியாகவில்லை.

இவர், கிரிப்டோ கரன்சியை உருவாக்கி வெளிக்கொண்டு வந்த காலகட்டம் என்பது, அமெரிக்கா பொருளாதார மந்தநிலையில் பாதிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு காலகட்டமாகும். உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் காகித கரன்சிகளுக்கும் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நோட்டுகள் பழுதடைந்ததும் புதிய நோட்டுக்கள் அச்சடிக்க பெரும் செலவாகிறது. அத்துடன், நாடுகள் அவ்வப்போது பணத்தை அச்சடித்துக்கொள்வதால், பண வீக்கம் ஏற்படுகிறது. இவற்றுக்கு மாற்றாக, உலகம் முழுக்க செல்லுபடியாகும் வகையில், கிரிப்டோகிராபி (Cryptography) முறையில், கிரிப்டோ கரன்சி எனும் ‘குறியாக்க நாணய’த்தை உருவாக்கி விட்டால், மேற்கண்ட குறைபாடுகள் களையப்படும் என்று சதோஷி நகமட்டோ குறிப்பிட்டார்.

2008, 2009 ஆண்டுகளில் கட்டுமான தொழிலில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியானது, அமெரிக்காவின் பல வங்கிகள் திவால் எனும் நிலைக்கு இழுத்துச் சென்றது. இதனால், அமெரிக்காவில் மட்டுமின்றி அதனை அதிகமாக சார்ந்திருந்த உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார மந்தநிலை (Economical Recession) ஏற்பட்டது. பொது மக்களின் பணம் பெரும் இழப்புக்கு ஆளானதும், பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான கிரிட்டோ கரன்சி எனும் மாற்று சிந்தனை வளர காரணமாக இருந்துள்ளது. பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் உருவாகும் எந்த நாணயமும், தகவல்களும் யாராலும் மாற்றவோ திருடவோ முடியாது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். “பிளாக் செயின்” தொழில்நுட்பம் குறித்து நாளை பார்ப்போம்…


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *