செய்திகள்

வெப் சீரிஸ்களுக்கு சர்டிபிகேட் அவசியம்: சென்சார் போர்டுக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்

ஓடிடி தளங்களில் திரையிடப்படும்

வெப் சீரிஸ்களுக்கு சர்டிபிகேட் அவசியம்:

சென்சார் போர்டுக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்

புதுடெல்லி, ஆக.1–

ராணுவத்தை மையப்படுத்தியுள்ள திரைப்படங்கள், ‘வெப் சீரிஸ்’களுக்கு தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தற்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. நேரடியாக ஓடிடி வெளியிடும் திரைப்படத்திற்கும், வெப் சீரிஸ்-க்கும் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதனால் பிறரை இழிப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும், தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வெளிவருகின்றன. இதற்கும் தணிக்கை வேண்டும் என பல தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.

அந்த வகையில் எக்தா கபூர் தயாரித்துள்ள ‛ரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு – சீசன் 2′ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இதில் நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர் எல்லையில் உள்ள போது அவர் மனைவி வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பது போல் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு காட்சியில் அசோக சக்கர முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி தயாரிப்பாளர் மீது முன்னாள் ராணுவ வீரர் டிசி ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு, இனி இவற்றை வெளியிடுவதற்கு முன், தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *