செய்திகள்

வெப்பநிலையைத் தெரிவித்ததை தொடர்ந்து நிலவில் 8 வகை தனிமங்களை கண்டறிந்த சந்திரயான்–ரோவர்

சென்னை, ஆக. 30–

நிலவின் தென்துருவத்தில் உள்ள வெப்பநிலையை கண்டறிந்த சந்திரயான்–3 ரோவர், தற்போது, அங்கு அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட 8 வகையான தனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தரையிரங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, சில நாட்களுக்கு முன்னர் ரோவர் தனியாக பிரிந்து நிலவில் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, நிலவில் உள்ள வெப்பநிலையை தெரிவித்து இருந்தது. நிலவின் 8 செ.மீ. ஆழத்தில் 57 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பம் உள்ளதை கண்டறிந்து தெரிவித்து இருந்தது.

8 தனிமங்கள் கண்டுபிடிப்பு

இந்நிலையில், நிலவில் இருக்கும் தனிமங்களை ரோவர் உறுதி செய்திருக்கிறது. அதாவது, நிலவில் ஆக்சிஜன், இருப்பதை கண்டறிந்ததுடன் அலுமினியம் அதிக அளவு இருப்பதையும் உறுதி செய்துள்ளது. மேலும், கந்தகம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், சிலிக்கான் உள்ளிட்ட 8 தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி கண்டுபிடித்திருக்கிறது. அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஹைட்ரஜனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் தேவை அதிகம். கந்தகமும் வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில் தற்போது நிலவின் தென் துருவத்தில் கிடைத்திருக்கும் தனிமங்கள் புதையல் என்றே சொல்லலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *