சிறுகதை

வென்டிலேட்டர் | ராஜா செல்லமுத்து

அந்த மருத்துவமனை அரக்கப்பரக்க இயங்கிக்கொண்டிருந்தது. முன்னைவிட இப்போது கொரோனா நோயாளிகள் குறைந்திருந்தாலும் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதே அங்கிருக்கும் மருத்துவர்களுக்குப்பெரிய சவாலாக இருந்தது. யாரையும் விலக்கி வைத்துப் பார்த்திராத மருத்துவர்களின் உபசரிப்பு அவர்களை இன்னொரு கடவுளாகவே கொண்டாடத் தோன்றியது அங்கிருக்கும் நோயாளிகளுக்கு.

‘‘டாக்டர்.. அங்க பேசண்ட்க்கு.. இருமல் அதிகமாயிருக்கு..’’ என்று செவிலித்தாய் கூப்பிட அந்த நோயாளியைப் பார்க்க வேகமாக ஓடினார் மருத்துவர் பவித்ரா.

மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த அந்த நோயாளியைத்தொட்டு ஆசுவாசப்படுத்தி

‘‘கூல்டவுன்.. கூல்டவுன்..’’ என்று சாந்தப்படுத்தினார் மருத்துவர் பவித்ரா. அவர் இன்னும் தனிமைப்படுத்தப்படாத நிலையில் இருந்தார்.

‘‘இவருக்கு டெஸ்ட எடுத்தாச்சா..?’’

‘‘எடுத்தாச்சு டாக்டர்..’’

‘‘ஓகே.. ரிசல்ட்ட உடனே கொண்டு வாங்க..’’ என்று மருத்துவர் பவித்ரா விரட்ட அந்தச் செவிலித்தாய் ஓட்டமும் நடையுமாய் ஓடினார்.

‘‘அந்த பேசண்ட் எப்பிடி இருக்காங்க..?’’ என்று இன்னொரு மருத்துவரிடம் பவித்ரா கேட்க

‘‘நவ் இஸ் பெட்டர்..’’ என்ற இன்னொரு மருத்துவர் சொல்ல

‘‘ஓகே டேக் சீரியஸ்லி..’’ என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு அடுத்த நோயாளியிடம் போனார் மருத்துவர் பவித்ரா.

அவளுக்கு இப்போது மாசமாயிருக்கிறார்.ஏழாவது மாசம். குழந்தை அசைகிறது.. நடப்பதற்கே அவளால் முடியவில்லை .இருந்தும் நோயாளிகளைக் காப்பாற்றுவதே ஒரே குறிக்கோள் என்று ஓடிக்கொண்டிருந்தான் பவித்ரா. அதற்குள் இரண்டொருமுறை அவளுக்கு போன் வந்திருந்தது. இந்த முறையும் தன் மூத்த மகள் பிரியாவிடம் கொஞ்சம் கோபமாகவே பேசினாள்.

‘‘பிரியா.. ப்ளீஸ்.. அண்டர்ஸ்டாண்ட் மீ.. நான் ஒர்க்கில இருக்கேன்.. ஐ கால்யூ லேட்டர்..’’ என்று போனைக் கட்செய்தாள்.

கட் செய்த மறு நிமிடமே மறுபடியும் அவளின் போன் ரிங்கானது.

‘‘வாட் டூ யூ வான்ட் பிரியா.. வொய் ஆர் யூ டிஸ்டர்ப் மீ.. நவ் ஐ ஆம் ஆன் டூட்டி.. ஐ கால் யூ லேட்டர்..’’ என்று மகள் பரியாவை பேசவே விடவில்லை பவித்ரா

‘‘மம்மி.. ஐ வான்ட் சாக்லெட்.. ஐ ஆஸ்க் டாடி .. டாடி வாஸ் ரெபூஸ்டு மை ரிகுவஸ்ட்.. ப்ளீஸ் டாக்டூ டாடி ம்மா..’’ என்று அழும் குரலில் பேசிய பிரியாவின் அன்பின் ஈரம் பவித்ரா நெஞசில் பசக் என ஒட்டிக்கொண்டது.

‘‘ஓகே பிரியா.. ஐ டாக்டூ டாடி..’’ என்று விழியோரம் ஈரம் சுரக்கப் பேசினாள் பவித்ரா.

‘‘டாக்டர்.. அங்க ஒரு புது பேசண்டுக்கு வென்டிலேட்டர் இல்லையாம்..’’ என்ற படியே ஓடி வந்தாள் ஒரு செவிலித்தாய்

‘‘ஏன் என்னாச்சு..? வென்டிலேட்டர் இருந்துச்சே.. நல்லா பாருங்க..’’ என்று பவித்ரா முதற்கொண்டு எல்லோரும் தேடினர்.

குடோன், லேப் என்று எல்லா இடத்திலும் வென்டிலேட்டர் தேடிக்கொண்டிருந்தனர்.

‘‘என்னாச்சு..?’’ என்று பவித்ரா பதற்றமடைந்தாள்.

‘‘மேடம்.. நம்மகிட்ட இருபத்தஞ்சு வென்டிலேட்டர் தான் இருந்துச்சு.. ஆர்டர் கொடுத்திருக்கோம்.. இன்னைக்கு சாயங்காலம் வந்திரும். இருந்த இருபத்தஞ்சு வென்டிலேட்டரும் பேசண்ட்டுக்கு போட்டாச்சு.. ஒரு வென்டிலேட்டர் கூட இல்லையே..!’’ என்று மருத்துவக்குழு கையைப்பிசைந்து கொண்டிருந்தது.

‘‘மேடம்.. வந்திருக்கிற பேசண்ட் யெங்.. ஒரு முப்பது முப்பத்தஞ்சு வயசு தான் இருக்கும்.. அவருக்கு மூச்சுவிடுறதில ரொம்பவே சிரமம் இருக்கு.. இப்ப என்ன பண்ணலாம்? மேடம்..’’ என்று ஒரு செவிலித்தாய் அரக்கப்பரக்கப்பேச

‘‘ஓகே.. இப்ப நம்மகிட்ட வேற வழியில்ல.. பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு போகச்சொல்லுவோமா..?’’

‘‘ஓகே மேடம்..’’

‘‘எஸ்.. அப்பிடியே செய்யுங்..க ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கா..?’’ என்று பவித்ரா கேட்க

‘‘ஓகே.. மேம் எல்லாம் ரெடியா இருக்கு..’’

‘‘சரி.. அந்த பேசண்ட ஆம்புலன்ஸ்ல ஏத்த ரெடி பண்ணுங்க..’’ என்று பவித்ரா சொல்லிக்கொண்டிருந்த போது ஒரு பாட்டி மருத்துவப்படுக்கையிலிருந்து வெளியே வந்தார்.

‘‘ஐயோ பாட்டி என்னாச்சு..? ஏன்.. நீங்க பெட்ட விட்டு எழுந்து வந்தீங்க.. போங்க பெட்டுக்கு.. ஏன்..? வென்டிலேட்டர எடுத்திட்டு வந்தீங்க.. சீக்கிரம் போங்க.. போங்க..’’ என்று பவித்ரா விரட்டினாள்.

‘‘இல்லம்மா.. எனக்கு வயசு இப்ப எழுபத்தி அஞ்சு.. இனிமே இந்த நோயிலிருந்து பொழச்சு என்ன பண்ணப்போறேன்.. நீங்க பேசிட்டு இருந்தத கேட்டுட்டு தானிருந்தேன். அந்த சின்ன வயசு தம்பிக்கு.. என் வென்டிலேட்டர குடுங்க..நான் வாழ்ந்து முடிச்சவம்மா.. நான் செத்துப்போனாலும் பரவாயில்ல. அந்த தம்பி வாழணும். என்னோட வென்டிலேட்டரக் குடுங்க..’’ என்று அந்தப்பாட்டி பேச பவித்ராவின் கண்கள் நிறைந்தன.

அப்போது பவித்ராவின் செல்போன் அலறியது அதை செவிசாய்காமலேயே இருந்தவளை

‘‘அம்மா.. உங்க செல்போன் அடிக்குது. எடுத்துப்பேசுங்க..’’ என்று அந்தப்பாட்டி சொல்ல

செல்போனை எடுத்துப் பார்க்க தன் மகள் பிரியாதான் பேசுகிறாள் என்பதைத் தெரிந்தவள் பேசாமல் இருந்தாள்.

‘‘அம்மா.. பேசும்மா.. உன்னோட குழந்தை தானே பேசுது.. நீங்க பேசிட்டு இருந்தத நான் கேட்டேன்மா.. வயித்துப்புள்ளை தாச்சி நீங்களே உசுரப்பணையம் வச்சு.. அடுத்தவங்களுக்காக வேல செஞ்சிட்டு இருக்கும் போது நான் இன்னொருத்தவங்களுக்காக என் வென்டிலேட்டரைக் கொடுக்கிறது தப்பில்லம்மா..

என்னோட வென்டிலேட்டர அந்தத்தம்பிக்கு வையுங்க..’’ என்ற அந்தப்பாட்டி தன் படுக்கையில் போய்ப்படுத்தாள்.

பவித்ராவின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *