செய்திகள்

வெடிபொருள் வைத்து சாகடிக்கப்பட்ட கேரள யானையின் நினைவாக சாக்பீஸ் சிற்பம் வடிவமைப்பு

காஞ்சீபுரம், ஜூன் 8–-

கேரளாவில் அன்னாச்சி பழத்தில் வெடிபொருள் வைத்து கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் நினைவாக மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி மாணவர் ஒருவர் சாக்பீஸ் துண்டில் யானையின் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்கோடு வனப்பகுதியில் கடந்த வாரம் உணவு தேடி ஊருக்குள் புகுந்த கர்ப்பிணி யானைக்கு அங்கிருந்த ஒருவர் வெடிபொருள் நிரப்பிய அன்னாச்சி பழத்தை கொடுத்தவுடன் ஏதும் அறியாத அந்த அப்பாவி கர்ப்பிணி யானை, துதிக்கையில் ஏந்தி அந்த அன்னாச்சி பழத்தை வாயில் போட்டவுடன் அந்த பழம் வெடித்து யானையின் வாய், தாடை, நாக்கு எல்லாம் சிதறிய நிலையில் வயிற்றில் குட்டியுடன் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இத்துயர சம்பவம் நாடு முழுவதும் விலங்கின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்த யானையின் நினைவாக மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் உலோக சிற்ப பிரிவில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர் கா.பிரேம்குமார் (25) என்பவர் 2.5 செ.மீட்டர் நீளத்தில் சாக்பீஸ் துண்டில் மிகச்சிறிய யானை சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

வெள்ளை நிற சாக்பீசில் யானை துதிக்கையால் அன்னாச்சி பழத்தை எடுப்பது போல அழகுற வடிவமைத்துள்ளார். இறந்த யானையின் நினைவாக வடிக்கப்பட்ட இந்த சிற்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *