அறிவியல் அறிவோம்
திருவாதிரை நட்சத்திரம் சீக்கிரம் வெடித்து சிதறப் போகிறதாம்.. ஏற்கனவே அதன் ஒளி வேகமாக மங்கத் தொடங்கியுள்ளது. எந்த உச்சநட்சத்திரமாக இருந்தாலும் எல்லாம் குறிப்பிட்ட காலம்தான் என்ற வானவியல் வாழ்க்கைத் தத்துவத்திற்கு திருவாதிரை மட்டும் விதிவிலக்கு இல்லை .
ஆங்கிலத்தில் Betelgeuse என்று அழைக்கப்படும், விண்வெளியின் ஒரு முக்கிய நட்சத்திரம் நம்மவர்களால் திருவாதிரை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் கால நேரம் குறிக்க பயன்படும் நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. விண்வெளியில் Orion, அதாவது மிருகசீரிடம் என்ற நட்சத்திர குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விண்மீன்தான் திருவாதிரை. இது சாதாரண விண்மீன் இல்லை. அளவு அடிப்படையில் பார்த்தால் சூரியனை விடவும் 20 மடங்கு பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நட்சத்திரம் சுருங்கி விரியும் தன்மையுள்ளது. நட்சத்திரங்கள் பொதுவாக அதன் ஆயுள் முடிந்த இறுதிக் கட்டத்தில் ஊதிப் பெரிதாகி வெடித்துச் சிதறும். இந்தநிலைக்கு அறிவியலாளர்கள் சூப்பர் நோவா என்று பெயரிட்டுள்ளனர்.
ஒரு விண்மீன் தனது இறுதிக்காலத்தை நெருங்கும்போது அதன் பிரகாசம் குறையத் தொடங்கும். திருவாதிரை நட்சத்திரம், 1 லட்சம் ஆண்டு பழமையானது. எனவே அதற்கு சூப்பர் நோவா இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது. அதற்கு ஏற்ப நட்சத்திரத்தின் உள்ளேயுள்ள தனிமங்கள் எரிவது அதிவேகமாக நடந்துகொண்டிருந்ததை விஞ்ஞானிகள் கவனிக்கத் தவறவில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும் பெருமளவில் திருவாதிரை நட்சத்திரம் மங்கிப்போயுள்ளது. 2019 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இதை உறுதி செய்கிறது. சுமார் 36 சதவீதம் அளவுக்கு ஓராண்டுக்குள்ளாக அது மங்கியுள்ளது. இதுவே சூப்பர் நோவா எனப்படும் வெடித்து சிதறும் நிலையை திருவாதிரை அதிவேகமாக எட்டி வருவதன் அடையாளம் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
மிகப் பிரகாசமாக தெரியக்கூடிய, நட்சத்திர பட்டியலில், முதலிடத்தில் இருப்பது சிரியஸ் என்ற விண்மீனாகும். இந்தப் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்து வந்ததுதான், திருவாதிரை. ஆனால் சுமார் ஓராண்டாகவே இந்த பிரகாசம் மங்கத் தொடங்கியதால் இப்போது 24 வது இடத்துக்கு சென்றுள்ளது இந்த நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஒளியாண்டு அடிப்படையில் இது 600 ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. எனவே 600 வருடங்கள் முன்பாக அந்த நட்சத்திரத்தில் நடந்ததுதான் இப்போது நமக்கு தெரியவருகிறது.
600 ஒளியாண்டு தொலைவில் திருவாதிரை நட்சத்திரம் உள்ளதால் அது வெடித்து சிதறும்போது நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் நட்சத்திரம் குறித்த புரிதலை இந்த வெடிப்பு மேலும் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
எனவே திருவாதிரையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதற்கு முன்பு நட்சத்திர வெடிப்புகள் நடந்தபோது அவற்றை ஆய்வு செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இருந்ததில்லை. இன்றைய காலகட்டத்தில் நிறையவே உபகரணங்கள் இருப்பதால் இந்த நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் பின்தொடர்கின்றனர். ஆனால் அது எப்போது வெடிக்கும்; அடுத்த ஆண்டுகளிலா அல்லது இன்னும் பல நூறாண்டுகள் கழித்தா என்பதைக் காலம்தான் சொல்லும்.