திருச்சி, ஏப். 27–
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து, தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனைகள் நடத்தி வருகின்றனர். மேலும் விமானத்தில் ஏற்ற வருகின்ற பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
ஆனால், இதுவரை இந்த சோதனைகளில் எந்தவிதமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் டெல்லியில் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் இந்த சோதனைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது,
திருச்சி விமான நிலையத்தில்…
இதே போல் திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பு அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக போலீசாரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை செய்யப்பட்ட பின்பு வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது.அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை செய்யப்படுகின்றன. மேலும் விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.