சென்னை, அக். 23–
சென்னை வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைபேசி அழைப்புகள், இ–மெயில்கள் மூலமாக வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் அழைப்புகள் வருவது சாதாரணமாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்தார். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய அவர், வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக வேளச்சேரி போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மிரட்டல் அழைப்பால் அதிர்ந்து போன போலீசார், உடனடியாக வேளச்சேரி ரயில் நிலையம் விரைந்தனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் இறங்கினர். இதை பார்த்த அங்கிருந்த பயணிகளில் சிலர் அதிர்ச்சி அடைந்து ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.
3 மணி நேர நடத்தப்பட்ட தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும், மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.