திருவனந்தபுரம், ஆக. 22–
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையில், மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட பின்னர், விமானத்தில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டு, விமானம் தனிமைப்படுத்தப்பட்ட விரிகுடா பகுதிக்கு மாற்றப்பட்டது.
அவசரநிலை பிரகடனம்
முன்னதாக மும்பையில் இருந்து பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி மூலம் அச்சுறுத்தல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
விமானத்தில் 135 பயணிகள் இருந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக பல விமானங்களுக்கு இதுபோன்ற போலி செய்திகள் வந்துள்ளதால் இது வதந்தியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானநிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.