செய்திகள்

வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு

புதுடெல்லி, ஆக. 8–

துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் வருகிற 10ந்தேதியுடன் ஓய்வு பெறும் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, துணை ஜனாதிபதியாக புதிதாக பதவி ஏற்கவுள்ள ஜெகதீப் தன்கர் நேற்று சந்தித்தார்.

துணை ஜனாதிபதி அலுவலகத்துக்கு தனது மனைவி டாக்டர் சுதேசுடன் வந்த ஜெகதீப் தன்கரை, வெங்கையா நாயுடு தனது மனைவி உஷாவுடன் வரவேற்றார்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி அலுவலகத்தை தன்கருக்கு வெங்கையா நாயுடு சுற்றிக்காட்டினார். அத்துடன் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சந்திப்பின்போது புதிய துணை ஜனாதிபதிக்கு அங்க வஸ்திரம் ஒன்றை வெங்கையா நாயுடு பரிசளித்தார். இரு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்கள் டுவிட்டர் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

வெற்றி சான்றிதழ்

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் கமிஷன் அளித்தது. அதில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

அந்த சான்றிதழின் கையெழுத்திட்ட நகலை மத்திய உள்துறை செயலாளரிடம் மூத்த துணை தேர்தல் கமிஷனர் தர்மேந்திர சர்மா, தேர்தல் கமிஷன் மூத்த முதன்மை செயலாளர் நரேந்திரா என்.புடோலியா ஆகியோர் ஒப்படைத்தனர்.

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக வருகிற 11ந் தேதி ஜெகதீப் தன்கர் பதவி ஏற்கிறார். அப்போது, அந்த நகல் வாசிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.