செய்திகள் போஸ்டர் செய்தி

வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை

Spread the love

கடலூர்,டிச.11–
கடலூரில் வெங்காயம் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதனை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
கடலூரில் மட்டும் கடந்த சில நாட்களாக மிக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு காய்கறி கடையில் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
போட்டி காரணமாக வெங்காயம் கிலோ ரு.10க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல்லாரி வெங்காயம் விலை கடந்த 2 மாதங்களாக வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
மராட்டியம் (நாசிக்), கர்நாடகா (பெல்லாரி), ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்லாரி வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதில் நாசிக் வெங்காயம் தான் முதல் தரமானது என்று கூறப்படுகிறது. இந்த மாநிலங்களில் பெய்த கனமழை யால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து, விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. பல்லாரி வெங்காயம் தேவையை சமாளிக்க எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எகிப்தில் இருந்து மும்பைக்கு 40 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் வந்தது. திருச்சிக்கு 300 டன்னும், மதுரைக்கு 130 டன்னும், சென்னைக்கு 60 டன்னும் வெங்காயம் இதுவரை வந்தது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது. மொத்த மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தரமான (நாசிக்) பல்லாரி வெங்காயம், தற்போது ரூ.100 விற்பனை செய்யப்படுகிறது.
எகிப்து வெங்காயம் நாசிக் வெங்காயம் போல் இருக்காது. அனைத்து வெங்காயத்தையும் விட பெரியதாக இருக்கும். நாசிக் வெங்காயம் ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 வெங்காயம் வரை நிற்கும். கர்நாடகா மற்றும் ஆந்திரா வெங்காயம் ஒரு கிலோவுக்கு 15 வெங்காயம் வரை எடை நிற்கும். ஆனால் எகிப்து வெங்காயம் ஒரு கிலோவுக்கு 5 முதல் 6 வெங்காயம் தான் நிற்கிறது. ஒரு வெங்காயம் மட்டுமே குறைந்தபட்சமாக 150 கிராம் முதல் அதிகபட்சமாக 600 கிராம் வரையில் அளவில் உள்ளது. எனவே இந்த வெங்காயத்துக்கு மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இருந்தாலும் தற்போதைய விலை உயர்வை சமாளிக்க ஒரு மாற்று ஏற்பாடாக எகிப்து வெங்காயம் அமைந்துள்ளது. வீட்டுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த வெங்காயம் இல்லை என்றாலும் ஓட்டல்கள், பேக்கரி கடைகளுக்கு இது தகுந்ததாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *