பிரேம் மணம் செய்து கொள்வதற்கு தந்தை மற்றும் தாயிடம் ஏகப்பட்ட நிபந்தனைகளைக் கூறினான்.
தனக்கு வரும் மனைவி என்ன படித்திருந்தாலும் அதைப் பெருமையாக பேசக் கூடாது. தனது பெயரின் பின்னால் போடக் கூடாது என்றான்.
வருபவள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தால் என்னால் சமாளிக்க முடியாது ; எனது நிலைமையை அறிந்து வருபவள் செயல்பட வேண்டும் ; வருபவளை நான் அடிமையாக நடத்த மாட்டேன்; அவளும் என்னை கௌரவமாக நடத்த வேண்டும் என்றான்.
உடனே பிரேம் தந்தை ஏண்டா நீ எந்த காலத்தில் இருக்கிறாய். தற்போதெல்லாம் பெண்கள் தான் நிபந்தனைகள் வைக்கிறார்கள். பெண் கிடைப்பது தற்போது மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.
பிரேம் தாயார் நாங்கள் பார்க்கும் பெண்ணை மணந்து கொள் என்றார்.
நண்பர்கள் மூலம் பிரேம் தந்தை ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். பிரேம் நிபந்தனைகளை மனதில் பிரேம் தந்தை நினைவு கொண்டு பெண்ணின் படிப்பைக் கேட்கவில்லை.
பெண் பார்த்த வீட்டில் இரண்டும் பெண்கள் தான்.
பெண் பார்க்கும் படலம் நடந்தது. அப்போது மணப்பெண் கமலா அவள் அம்மாவிடம் இந்த வரனையே முடித்து விடு என்றாள்.
கமலாவின் தாயார் மாப்பிள்ளைப் பையன் நிறைய நிபந்தனைகள் கூறியதாக அறிந்தேன். படித்ததை மறந்து அடிமை போல் வாழப் போகிறாயா, வாழ்க்கையை வீணடிக்காதே என்றார் அம்மா.
கமலா விடாப்பிடியாக முடித்து விடு என்றாள்.
அடுத்த ஒரு தங்கை உள்ளாள் ;. நான் இன்னும் வீட்டில் இருந்தால் சிரமம் என்றாள்.
அடுத்த பேச்சு வார்த்தையாக பிரேம் தந்தை நீங்கள் செய்வதைச் செய்யுங்கள். எங்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார்.
திருமணம் எளிய முறையில் நடந்தால் நலம்; தேவையற்ற செலவுகளை குறைத்தால் நல்லது ; மிக்க நன்றி என்று கூறிய பெண்ணின் தந்தை உங்கள் பையன் சம்மதம் தெரிந்தால் நல்லதென்றார்.
பிரேம் சரியென்றான்.
பெண்ணின் தந்தை பிள்ளைகள் திருமண செலவுக்கு நான் பணம் சேர்த்து வைத்துள்ளேன் என்றார்.
பிரேம் மனதிற்குள் அப்பாடி நமது பாக்கெட் தப்பித்தது என்று நினைத்தார்.
எனது பெண்கள் வாழ்க்கை நன்றாக அமைந்தால் போதும் என்றார் பெண்ணின் தந்தை.
திருமணம் எளிய முறையில் நடந்தேறியது.
வீட்டிற்கு வந்த மருமகளை பிரேமின் தாயார் நன்கு கவனித்தார்.
கமலாவோ எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.
யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்த செயல் பட்டார் கமலா.
இந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் சற்று விநோதமாக இருந்தது கமலாவுக்கு. யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவரவர்கள் தங்கள் வேலை உண்டென இருந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தவர் என்ன செய்கிறார்கள் என்ற ஆவல் இன்றி, எந்த ஒரு வாக்குவாதமும் இன்றி வாழ்க்கை செல்வதைக் கண்டு விநோதமடைந்தார் கமலா.
அவரவர்கள் தங்கள் முடிவுப்படி நடந்தார்கள். இந்த வீட்டில் அவரவர் வங்கிக் கணக்கில் என்ன பணமுள்ளதென மற்றவர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
கேட்கவும் மாட்டார்கள்.
குடும்பச் செலவு முழுவதையும் பிரேம் மேற்கொண்டார். விழா என்றால் மட்டும் யார் போகணும் என்பதை மட்டும் கலந்து ஆலோசிப்பார்கள். அந்த சில நிமிடங்கள்தான் குடும்ப அன்பர்கள் பேசுவார்கள்; சேர்ந்திருப்பார்கள்.
காலை மாலையென மாறி மாறி கழிந்து கொண்டு இருந்த வேளையில் கமலா அவரது மாமியாரிடம் தினமும் தான் ஒரு வேலையாக பகல் 11 மணியளவில் சென்று மதியம் 3 மணிக்கு வருவேன் என்றார்.
தாராளமாக சென்று வா என்றார்.
மதியம் உணவு என்ற மாமியாரிடம் கிளம்பும் முன் சாப்பிட்டு கிளம்புவேன் என்றார்.
கமலா இரவு பிரேமுடன் இருக்கும் போது நிறைய பேசணும் என்று எண்ணுவார். ஆனால் பிரேம் எது கேட்டாலும் ரத்ன சுருக்கமாக பதில் கூறி விடுவார்.
கமலா கருவுற்றதாக பிரேமிடம் அவரது தாயார் கூற, சற்று புன்னகையுடன் கமலாவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி என்றார்.
கமலாவிற்கு மகள் பிறந்ததும் பிரேம் என்ன சொல்வாரோ என்ற கவலையில் ஆழ்ந்த போது, அங்கு வந்த பிரேம் மற்றும் மாமியார் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துள்ளார் என்றார்.
கமலா நிம்மதியடைந்தார்.
மகளுக்கு விசாலினி என்ற பெயர் வைத்தார்கள். மகளை வீட்டில் உள்ள எல்லோரும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டார்கள்.
நாட்கள் செல்ல செல்ல மகளாவது வீட்டில் கலகலப்பை உண்டாக்குவார் என எதிர்பார்த்தார் கமலா. ஆனால் மகளோ தனது கணவர் நடவடிக்கையையே பின்பற்றி சென்றது கமலாவிற்கு மனதிற்குள் வருத்தம்.
விசாலினி நன்றாக படித்ததால் கமலாவிற்கு ஒரு கவலை தீர்ந்தது. ஏதாவது விசாலினி சந்தேகம் கேட்டால் கமலா நன்கு புரியும்படி சொல்லும் விதம் கண்டு விசாலினி மகிழ்ந்தாலும் அம்மாவை பாராட்ட மாட்டார்.
கமலா மனதிற்குள் விதை ஒன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும் என்று கூறிக் கொள்வார்.
கல்லூரிக்குச் சென்று வந்த விசாலினி அதிசயமாக அம்மாவிடம் ஒரு திட்ட அறிக்கை பண்ணவேண்டும். தலைப்பு இது தான் என்றார்.
அடுத்த நாள் திட்ட அறிக்கையை கமலா முடித்து மகளிடம் தந்ததும், எப்படி இவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள், என்ன படித்துள்ளீர்கள் என்றாள் .
கமலாவின் சிறு புன்னகையே பதிலாக அமைந்தது.
அன்று வெளியில் சென்று வந்த கமலாவை பிரேம் மற்றும் விசாலினி வரவேற்றனர்.
உங்கள் அடக்கத்திற்கும் படிப்பிற்கும் தலை வணங்குகிறோம்; வாருங்கள் முனைவரே என்றார்கள். என்ன இந்த வெகுமதி. யாரால் இந்த நிகழ்வு என்ற மன ஓட்டத்தில் உழன்றாள் கமலா. அவளைத் தட்டிக் கொடுத்த மாமியார் எனக்கு உன் தோழி மூலம் விவரங்கள் கிடைத்தது. இவ்வளவு படித்த உன்னால் எப்படி இவ்வளவு பொறுமையாக நடக்க முடிகிறது என்றார்.
உனது திருமணம் முடிந்ததுமே நான் பிரேமை இளங்கலை பட்டம் பயிலச் செய்து மேற் கொண்டு ஒரு படிப்பையும் படிக்க வைத்தேன். அதனால் இன்று அவனுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது என்றார்.
கமலா எதிர் பாராத வேளையில் பிரேம் கமலாவின் கையைப் பிடித்து எல்லாம் உனது வரவிற்குப் பின்தான் என்றான்.
கமலா கால் தரையில் நிற்கவில்லை என்றே கூறலாம்.
அப்போது அம்மா என்ற குரல் அறையிலிருந்து வர, எல்லோரும் அந்த அறைக்குச் செல்ல விசாலினி அம்மாவைப் பார்த்து இனிமேல் இது நமது அறை, இங்கிருந்து உங்கள் செயல்பாடுகளை தொடங்கலாம் என்றார்.
இன்று முதல் இந்த வீட்டில் எல்லோரும் மனம் விட்டு பேச வேண்டும், போதும் இந்த தனித்தனி வாழ்க்கை. இது இந்த வீட்டின் ராணி விசாலினியின் கட்டளை என்றாள். கமலாவின் மாமியார் அடக்கத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.,
பிரேம் மற்றும் அவரது தந்தை இனிமேல் வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சமில்லை என்றாள்.
கமலா ஒரு இனிப்புப் பொட்டலத்தை நீட்ட, எல்லோரும் என்னவென்று வினவ, நான்கு கல்லூரிகள் என்னை தினம் நிகழ்நிலை அதாவது கணினி வாயிலாக பாடம் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்றார்.
பிரேம் மனதிற்குள் தனது மகள் திருமணச் செலவு பற்றிக் கவலையில்லை என்று நினைத்த வேளையில்
விசாலினி அம்மா அடுத்து நான் என்ன படிக்கணும் என்று கூறுங்கள்,
நிறையப் படித்து நல்ல வேலையில் அமர்ந்தால் தானே சொந்தக் காலில் நிற்க முடியும் என்றாள்.
மாமியார் கமலாவிடம் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்றதும் பொங்கிவந்த சிரிப்பை அடக்க முடியாமல் முதல் தடவையாக கமலாவின் சிரிப்பு அந்த வீட்டில் கலகலப்பை ஏற்படுத்தியது.
#சிறுகதை