கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் விருதுகளையும் வழங்கினார்
சென்னை, ஜன.26–
சென்னை கடற்கரையில் இன்று நடந்த குடியரசு தினவிழாவில் வீரதீர செயல் புரிந்த 5 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் மெச்சத்தக்க பணிகளை செய்த 5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் வழங்கினார்.
சிறந்த காவல்நிலையத்திற்கான விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதுகளையும் அவர் வழங்கினார்.
நாட்டின் 74–வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
74–வது குடியரசு தின விழாவை ஒட்டி காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.இனயத்துல்லாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
அண்ணா பதக்கங்கள்
வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள்: அரசு ஊழியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த தலைமைக் காவலர் பெ.சரவணனுக்கும், வேலூரைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசுக்கும் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பிரிவுக்கான விருது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.செல்வம் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசிய பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேளாண்மை துறை சிறப்பு விருது
திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சம் காசோலை, பதக்கம் வழங்கப்பட்டது. இவர் 1 ஏக்கரில் 5780 கிலோ நெல் மகசூல் செய்து சாதனை படைத்தார்.
சென்னை மத்திய நுண்ணறிவுப்பிரிவு தலைமையக காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயமோகன், சேலம் மண்டலத்தின் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன், விழுப்புரம் மணடலத்தின் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா, மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அயல்பணி மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் சிவநேசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த பதக்கம் பெறுபவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் காசோலை, பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை, திண்டுக்கல் தாலுகா ஆகிய காவல் நிலையங்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.