சிறுகதை

வீண் சண்டை | துரை. சக்திவேல்

Spread the love

சென்னை வடபழனி பஸ் நிலையத்தில் பட்டினப்பாக்கம் செல்லும் 12பி பேருந்துக்காக கைக் குழந்தையுடன் காத்திருந்தாள் ஜோதி.

காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

பஸ் எப்போது வரும் என்று பஸ் நிலைய வாசலை நோக்கியே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர் பயணிகள்.

அப்போது 12பி பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்குள் வந்தது.

அதை பார்த்த சில பயணிகள் வேகமாக ஓடி பஸ் நிற்பதற்கு முன்பாகவே அதில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர்.

அப்போது அந்த பேருந்திலிருந்த பயணிகள் கீழே இறங்க முடியவில்லை.

இதனால் அங்கு பெரும் பரபரப்பே ஏற்பட்டது.

பெரும் பரபரப்புடன் ஆண்களும் பெண்களும் மாணவ மாணவிகளும் ஏறினர்.

அதுமட்டுமல்லா அங்கு சீட் பிடிப்பதற்கு போட்டா போட்டி ஏற்பட்டது.

கூட்டத்தில் ஏற முடியாமல் கைக்குழந்தையுடன் ஓரமாக நின்ற ஜோதி, ஓரளவு கூட்டம் ஏறியதும் பேருந்தில் ஏறினார்.

பேருந்தில் உட்கார சீட் எதுவும் இல்லை.

அதனால் ஜோதி ஒரு கையில் கைக்குழந்தையை வைத்திருந்ததால் பேருந்தை பிடித்து நிற்பதற்கு முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

பேருந்து புறப்பட தயாரானது. நடத்து டிக்கெட் கொடுக்க துவங்கினார்.

பேருந்துக்குள் சுற்றி சுற்றி பார்த்த ஜோதிக்கு ஒரு சீட் காலியாக இருப்பது தெரியவந்தது.

உடனே வேகமாக அந்த சீட்டை நோக்கி நகர்ந்தார் ஜோதி.

அந்த சீட்டில் உட்கார முயன்ற போது, அதன் அருகில் இருந்த கல்லூரி மாணவன் ஆள் வருகிறார்கள் என்று தனது பையை அந்த இடத்தில் வைத்தான்.

உடனே ஜோதி, அந்த மாணவனிடம் நான் உட்காரலாமா? என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவன், இல்லை… இல்லை என் நண்பன் வருகிறான் என்று கூறினான்.

கையில் குழந்தையுடன் நிற்க முடியவில்லை. நான் உட்கார்ந்துக்கிடலாமா என்று பணிவுடன் கேட்டார் ஜோதி.

ஆனால் அந்த மாணவன் இடம் கொடுக்க மறுத்துவிட்டான்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த குமார் என்ற வாலிபர் அந்த மாணவனிடம் இடத்தை கொடுக்கும்படி பணிவுடன் கேட்டார்.

ஆனால் அந்த மாணவன் சீட் கொடுக்கவில்லை.

இதனால் கோபமடைந்த குமார், அந்த மாணவனிடம் இல்லாத ஆளுக்கு எதுக்கு தம்பி சீட்டு பிடித்து வைச்சிருக்க.

அந்த பொண்ணு பாவம். கைக் குழந்தையுடன் நீக்கிறாங்க. கொஞ்சம் இடம் கொடு என்று கூறினார்.

இதை கேட்டதும் அந்த மாணவன் கோபம் அடைந்தான்.

சார் உங்க வேலையை பார்த்துட்டு போங்க .எங்களுக்கு தெரியும் என்று கோபத்துடன் பேசத் தொடங்கினான் அந்த மாணவன்.

அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், ‘‘இந்த பசங்களுக்கு தினமும் இதே வேலை தான் சார்… வராத நண்பனுக்கு சீட்டு பிடிச்சுட்டு வைக்கிறது. அந்த பசங்க பஸ் கிளம்பிய உடன் ஓடி வந்து படிக்கட்டில் தொங்கிட்டு வந்து அப்புறம் அந்த இடத்தில் உட்காருவாங்க என்று தனது பங்குங்கு சத்தம் கொடுத்தார் முதியவர் ஒருவர்.

உங்க வேலையை பாருங்க… எங்களுக்கு தெரியும் என்று மீண்டும் சத்தம் போட்டான் அந்த மாணவன்.

இதனால் பஸ்சில் நின்று கொண்டிருந்த சிலருக்கும் அந்த மாணவனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்த பஸ்சில் இருந்து ஒரு சில மாணவர்களும் அந்த மாணவனுக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர்.

இந்த பரபரப்பு நடந்து கொண்டிருக்கையில் பஸ் கிளம்பியது.

கைக்குழந்தையுடன் வந்த ஜோதி, பரவாயில்லை சார் விடுங்க என்று அவர்களை சமாதானப்படுத்தி பேருந்து கம்பியை பிடித்துக் கொண்டு நின்றார்.

அப்போது வேகமாக பஸ்சில் ஏறிய மாணவன் ஒருவன் கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு அந்த இருக்கைக்கு வந்து உட்கார்ந்தான்.

பஸ் வடபழனி கோவிலை தாண்டி பஸ் நிறுத்தில் நின்றது. அங்கும் பயணிகள் கூட்டம் அதிகமானது.

இதனால் பேருந்துக்குள் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்பட்டனர்.

பேருந்து அங்கிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்றதும் கூட்ட நெரிசலில் சிக்கிய ஜோதி கைக்குழந்தையுடன் நிற்க முடியாமல் அவதிப்பட்டார்.

அவருக்கு பரிதாபப்பட்டு இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

இதை பார்த்த குமார் அந்த மாணவர்களிடம்‘‘ தம்பி, நீங்க சின்ன பசங்க தானே, இந்த அம்மா பாவம் கைக் குழந்தையுடன் நின்று கொண்டு வருகிறார். அவருக்கு இடம் கொடுக்காலாமே ’’என்று கூறினார்.

ஆனால் அந்த மாணவர்கள் குமாரிடம் சண்டை போடத் தொடங்கினர்.

இதனால் சிறிது நேரம் அவர்களுக்கிடையயே வாய் தகராறு ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டனர்.

நான் சீட்டு பிடிச்சேன் அதனால் இந்த இடம் எனக்கு தான் என்றான் மாணவன்.

தம்பி பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்தால் பேருந்தே சொந்தமாகிவிடாது.

நீ இன்னும் கொஞ்சம் நேரத்தில் இறங்கி போவ. அப்போது அந்த சீட்டை எடுத்துக் கொண்டு போவியா என்று குமார் பதிலுக்கு கூறினார்.

பஸ் பனகல் பார்க் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் வந்த போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் இறங்குவதற்காக எழுந்தார். அந்த இடத்தில் ஜோதி அமர்ந்தார்.

குமாருக்கும் அந்த மாணவனுக்கு இடையே நடந்த சண்டை முடியவில்லை. தொடர்ந்தது.

ஒருவருக்கொருவர் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டே வந்தனர்.

உடனே பஸ் நடத்தநர் கொஞ்சம் நேரம் போறதுக்கு எதுக்கு இரண்டு பேரும் சண்டை போட்டு வறேங்க… விடுங்க சார் என்று கத்தினார்.

குமார் அமைதியானார்.

பேருந்து பாண்டிபஜார் பஸ் நிறுத்தத்தை தாண்டி எஸ்.ஐ.டி. கல்லூரிக்கு அருகில் வந்த போது அந்த மாணவர்கள் எழுந்து சென்றனர்.

அந்த இடத்தில் குமார் அமர்ந்து கொண்டார்.

யாரோ ஒரு பெண் உட்காருவதற்காக நாமே ஏன் சண்டை போட்டோம்…

இந்த பஸ்சில் இத்தனை பேர் உட்கார்ந்து இருந்தாங்க. அவங்க யாரும் அந்த பொண்ணுக்கு இடம் கொடுக்க முன் வரலை. வேறு யாரும் அந்த பொண்ணுக்கு ஆதரவா பேசலை…

நாமே ஏன் இந்த பசங்க கூட வீண் சண்டை போட்டோம் என்று நினைத்த குமார் தனது தலையில் அடித்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் பட்டினப்பாக்கம் வந்தது. அவரும் பஸ்சிலிருந்து இறங்கி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *