செய்திகள்

வீட்டு உபயோக பொருள் குடோனில் பயங்கர தீ: பல கோடி ரூபாய் சேதம்

சென்னை, ஆக. 18–

சென்னை வானகரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் பகுதியில் மிஸ்டர் கோல்ட் எண்ணெய் குடோன் செயல்பட்டு வந்தது. இதன் அருகிலேயே ப்ளைவுட் குடோன், டைல்ஸ் குடோன் ஆகியவை இயங்கி வந்தன. நேற்றிரவு எண்ணெய் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது . இதனால் அருகில் இருந்த 2 பிளைவுட் பர்னிச்சர் குடோன், மற்றும் 6 டைல்ஸ் குடோன் ஆகியவற்றிற்கும் தீ வேகமாக பரவியது.

இதுகுறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்பாக்கம், எழும்பூர், கேகே நகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

பல கோடி ரூபாய் சேதம்

தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே, எண்ணெய்யுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டேங்கர் லாரிகளிலும் பற்றி எரிந்தது. இதனால் பர்னிச்சர், டைல்ஸ் குடோன்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்பு புகை சூழ்ந்தது. இதனால் மூச்சு திணறல், சுவாசம் பிரச்சனை ஆகியவை ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் குடோனின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இப்பெரும் தீ விபத்தில் நல்வாய்ப்பாக இரவு நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதன் காரணமாக யாருக்கும் காயமோ, உயிர் இழப்போ ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *