செய்திகள்

வீட்டுக்கு தி.மு.க; நாட்டுக்கு அண்ணா தி.மு.க: எடப்பாடி பழனிசாமி பேச்சு

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று தீவிர பிரச்சாரம்

நாட்டு மக்கள் தி.மு.க.வை மறந்து விட்டார்கள்

வீட்டுக்கு தி.மு.க; நாட்டுக்கு அண்ணா தி.மு.க:

எடப்பாடி பழனிசாமி பேச்சு

விவசாயிகளை கொச்சைப்படுத்தும் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி, மார்ச் 20–

தி.மு.க.வை மக்கள் மறந்து விட்டார்கள். வீட்டுக்கு தி.மு.க; நாட்டுக்கு அண்ணா தி.மு.க. என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

போலி விவசாயி, நல்ல விவசாயி என விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் என்றும் முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று சூறாவளி பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று காலை அவர் கள்ளக்குறிச்சியில் பிரச்சாரத்தை துவக்கினார். அங்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்தும், அடுத்து சங்கராபுரம் தொகுதியில் மருத்துவர் ராஜாவை (பா.ம.க. வேட்பாளர்) ஆதரித்தும், ரிஷிவந்தியம் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் ‘எஸ்.கே.டி.சி’ ஏ.சந்தோஷை ஆதரித்தும் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (20–ந் தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலே கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் எம். செந்தில்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள். சகோதரர் எம்.செந்தில்குமார் திறமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். உங்களுடைய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துவந்து தீர்க்கக் கூடிய நல்ல வேட்பாளர். அண்ணா தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. தி.மு.க. கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து, என்னைப் பற்றியும், நமது கூட்டணி கட்சி தலைவர்களைப் பற்றியும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அண்ணா தி.மு.க.வை பொறுத்த வரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தெய்வங்களின் வழி நடக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தான் ஏழை, எளிய, பாட்டாளி, உழைப்பாளி, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெற்றனர். புரட்சித்தலைவி அம்மா அதே வழியில் சிறப்பான ஆட்சித்தந்தவர். அம்மா முதலமைச்சரான பின்புதான் ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற்றார்கள். அவ்வளவு திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தது. அம்மாவின் அரசு செய்த சாதனை ஏராளமான சாதனை.

விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார்

ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் பொய்யை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் கூறுகிறார் நான் விவசாயி இல்லையாம், போலி விவசாயியாம். விவசாயிகளில் கூட போலி விவசாயியை கண்டறியக்கூடிய தலைவர் ஸ்டாலின். விவசாயிகளைப் பற்றி தெரியாத தலைவர் ஸ்டாலின். நான் நிலம் வைத்துள்ளேன். விவசாயம் செய்கின்றேன். இதில் என்ன போலி விவசாயி, நல்ல விவசாயி. இப்படி எல்லாம் கேலி கிண்டல் செய்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறார். அவர் பேசுவது என்னைப் பற்றி அல்ல விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் தலைவர் தி.மு.க தலைவர்.

இன்னொன்றையும் பேசி வருகிறார், எங்களுடைய அமைச்சர்களைப் பற்றி அவதூறு பேசி வருகிறார். எங்கள் உள்ளாட்சி துறை அமைச்சரைப் பற்றி பேசியுள்ளார். அவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். நீ கொள்ளை அடிப்பதில் தான் குறியாக இருந்தாய், நாட்டு மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. இன்றைக்கு எங்களுடைய உள்ளாட்சி துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு 100க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

உள்ளாட்சி துறையில் சாதனை

இந்தியாவிலேயே அதிக விருதுகளைப் பெற்ற துறை உள்ளாட்சி துறை. பள்ளியில் பரிட்சை வைத்துத்தான் மாணவர்களின் தரத்தினை நிர்ணயிப்பார்கள். அப்போழுதுதான் அவர்கள் உயர்கல்வியை அடைய முடியும். அது போலத்தான், நமது உள்ளாட்சி துறை அமைச்சருக்கு, இந்திய அளவில் தேர்வு வைத்தார்கள், அந்த தேர்வில் வெற்றி பெற்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

நீங்களும் தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தீர்கள், என்ன செய்தீர்கள். ஒரு விருதுதினை பெறவில்லை. உனக்கு அந்த திறமை இல்லை. நீ பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்வது. மக்கள் உங்களுக்கு துணை முதலமைச்சராக வாய்பளித்தார்கள். அந்த கால கட்டத்தில் மத்தியிலும் அங்கம் வகித்தீர்கள். அப்போது கூட விருதுகளைப் பெற முடியவில்லை.

ஊழலில் மிதந்த தி.மு.க.

திறமை இல்லாத தலைவர் தி.மு.க தலைவர். அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார் ஸ்டாலின். அண்ணா தி.மு.க. ஊழல் செய்கிறது என்று கூறிவருகிறார். தி.மு.க தான் ஊழல், ஊழல் என்று ஊழலிலே மிதந்த கட்சி. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதுதான் இதெல்லாம் நடந்தது. அதனால் தான் அந்த பழக்க தோஷம் விடவில்லை. ஊழல், ஊழல் என்று பேசி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது அம்மாவின் அரசு. மாவட்ட ஆட்சியர் அலுவலம் கட்ட துவங்கும் போது ஸ்டாலின் தூண்டுதலின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணியை தடுத்துள்ளார். இந்த மாவட்டம் தொடங்கி குறுகிய காலத்திலேயே அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கொடுத்துள்ளோம்.

எந்த மாவட்டத்திலும் இந்த மாதிரி திட்டங்கள் கிடையாது. இந்த மாவட்டம் அறிவித்த பிறகு நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றுமே நடக்கவில்லை என்று ஸ்டாலின் கூறிவருகிறார். கள்ளக்குறிச்சி வந்து பாருங்கள் பணி நடக்கிறதா இல்லையா என்று.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேலம் மாவட்ட எல்லையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்ககப்பட்டுள்ளது. நானே வந்து அடிக்கல் நாட்டினேன், நானே வந்து திறந்து வைத்தேன். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவதோடு சரி எனக் கூறி வருகிறார். ஸ்டாலினே, நானே வந்து அடிக்கல் நாட்டினேன், நானே வந்து திறந்து வைத்தேன்.

அதிகாரிகளை மிரட்டும் தி.மு.க.

ஸ்டாலின் பத்து வருடமாக ஆட்சியில் இல்லை. மக்கள் வனவாசத்திற்கு அனுப்பி விட்டார்கள். ஏனென்றால் நல்லது செய்தால் தானே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்வதே கிடையாது. நல்லது என்ற வார்த்தையே தி.மு.க.விடமிருந்து வராது. இன்னமும் ஆட்சிக்கே வரவில்லை, இப்போதே காவல் துறையை மிரட்டுகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன பண்ணுவ என்கிறார்கள். இங்கிருந்து அங்க மாற்ற போகிறீர்கள் அவ்வளவு தானே. அரசு அதிகாரிகள் சுமூகமாக பேசி, நல்ல திட்டங்களை அவர்கள் மூலம் செயல்படுத்தினால் தான் மக்கள் பயன்பெறுவார்கள். திட்டங்களைப் போடுவதுதான் நாம், அதை செயல்படுத்துவது அதிகாரிகள். அதிகாரிகள் திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தினால் அந்த அரசாங்கத்திற்கு நற்பெயர் கிடைக்கும். ஆனால், தி.மு.க.வினர் அதிகாரத்திற்கு வருமுன்னரே இப்படி என்றால், வந்தால் அதிகாரிகளை என்ன பாடுபடுத்துவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உதயநிதி கூட காவல் துறை உயர் அதிகாரியையே மிரட்டி வருகிறார். அண்ணா தி.மு.க ஆட்சியில் அப்படி அல்ல. முதலமைச்சர் கூட அதிகாரிகளை மரியாதை கொடுத்து நடத்துகின்றோம். அவர்கள்தான் அரசாங்கம் நிறைவேற்றுகிற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை மேற்கொள்பவர்கள். எனவே, அவர்களிடம் அன்பாகப் பேசுவதன் மூலம் அவர்கள் அந்தப் பணியை மேற்கொண்டால்தான் அந்தப் பணிகள் சிறக்கும்.

போலீசை தாக்கிய தி.மு.க.

ஆனால், தி.மு.க.வினர் அவ்வாறு அல்ல, அவர்கள் மிரட்டியே பழக்கப்பட்டவர்கள். அவர்களின் பழக்க தோஷம் விடாது. அதை மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க. என்றாலே ஒரு ரௌடி கட்சி, அராஜகக் கட்சி. அதற்கு அந்தத் தலைவரே உதாரணம். ஏனென்றால், அவரே அவ்வாறுதான் பேசுகிறார். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி.

நேற்றையதினம் ஆத்தூரில் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்துத் காவல் துறையினரை தி.மு.க. வேட்பாளர் கீழே தள்ளி விட்டுச் செல்கிறார். அதனால், காவல் துறை அதிகாரி சாலையில் படுத்து போராட்டம் செய்கிறார். இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது.

கட்டப்பஞ்சாயத்து

காவல் துறைக்கே இப்படிப்பட்ட கதியென்றால் மக்களுக்கு எப்படி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க.வினர் ஹோட்டலுக்குச் சென்றால், நன்றாக சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கமாட்டார்கள். அவர்கள் ஆட்சி இருக்கும்போது மிரட்டியே சாப்பிட்டு வந்தனர். ஆனால், அண்ணா திமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சென்னை ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு பணம் கேட்ட உரிமையாளரை தி.மு.க. தொண்டன் அடிக்கிறார். அதைக் கண்டிக்காமல், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஹோட்டலுக்குச் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். கட்டப் பஞ்சாயத்து செய்பவர் ஒரு தலைவரா? இப்படிப்பட்ட கட்டப் பஞ்சாயத்துத் தலைவர் நாட்டிற்குத் தேவையா?

தென் மாவட்டத்தில் தி.மு.க.-வின் ஒன்றியச் செயலாளர் தேங்காய் கடையில் தேங்காய் வாங்கிவிட்டு, காசு கேட்டால் கடைக்காரரை அடிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் கோரப் பசியில் இருக்கிறார்கள். ஆட்சியில் அமர்ந்தால் விடுவார்களா? வர்த்தகர்கள் எல்லாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். நாங்கள் இதுவரை உங்களிடம் வசூலுக்கு வந்ததில்லை. தி.மு.க.-வினர் வசூல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கருணாநிதி இருந்தபோதும் அவ்வாறுதான். எனவே, தப்பித் தவறி தி.மு.க.விற்கு ஓட்டு போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். இது தி.மு.க.-விற்கு தொட்டில் பழக்கம்.

தி.மு.க.விற்கு வாய்ப்பு தராதீர்கள்

இப்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இங்கு ஜாதி, மதச் சண்டைகள் கிடையாது, அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், தி.மு.க. ஆட்சி வந்தால் அதற்கு ஆபத்து வந்துவிடும். எனவே, அமைதியாக இருந்து, மேலும் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், தி.மு.க.-விற்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள், நீங்கள் வாய்ப்பு கொடுக்கமாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.

அண்ணா தி.மு.க. ஆட்சிதான் அனைத்துத் தரப்பு மக்களுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில அதிகளவில் கல்லூரிகளை வழங்கியுள்ளோம். அதேபோல, ஏரிகள், குளங்கள், குட்டைகளை விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாரும் வகையில் குடிமராமத்துத் திட்டத்தை செயல்படுத்தி, விவசாயம் மற்றும் குடிப்பதற்குத் தேவையான நீரைத் தேக்கிக் கொடுத்துள்ளதுடன், தூர்வாருவதினால் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இயற்கை உரமாக பயன்பட்டு, விளைச்சல் அதிகரித்துள்ளது.

விவசாய பம்பு செட்களுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1–ம் தேதி முதல் வழங்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளோம். பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே அதிகளவு பயிர் இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 9,300 கோடி பெற்றுத் தந்துள்ளோம்.

விவசாயிகளின் அரசு

புயல், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் அரசு என்பதற்கு இவையெல்லாம் சான்று. அதேபோல், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கூட்டுறவுக் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். எல்லா குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். 100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுகளைத் தேடிவரும். கேபிள் டிவி இணைப்பு கட்டணமில்லாமல் கொடுக்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

ஏழை, எளிய மக்கள் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி சாதனை படைத்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களுக்கும் அரசே நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு ஏற்கனவே கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளில் வசிக்க இயலாத அளவிற்கு பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

அண்ணா தி.மு.க. அரசு உங்கள் அரசு, மக்களின் அரசு. ஒரு விவசாயி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நமது வெற்றி வேட்பாளர் எம்.செந்தில்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்து மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர எங்களுக்கு உறுதுணையாக இருந்து வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ரிஷிவந்தியத்தில்…

ரிஷிவந்தியம் தொகுதியில் ‘எஸ்கேடிசி’ சந்தோஷை ஆதரித்து பேசியதாவது:–

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கும் வாரிசு இல்லை. இந்த மக்கள் தான் வாரிசு. வீட்டில் குழந்தைகளுக்கு எப்படி பார்த்து பார்த்து செய்வோமோ, அதைப்போல எம்.ஜி.ஆரும், அம்மாவும் உங்களை வாரிசுகளாக ஏற்று என்னென்ன தேவை என்பதை அறிந்து செய்து கொடுத்தார்கள். மறைந்த 2 தெய்வங்களின் ஆசி நமக்கு இருக்கிறது. நமக்கு நல்ல தலைவர்கள் கிடைத்தார்கள். உங்களுக்கும் (ஸ்டாலின்) ஒரு தலைவர் (கருணாநிதி) கிடைத்தார். அவர் குடும்பத்தைத் தான் பார்த்தார். மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை.

மக்கள் மறந்தார்கள்

எனவே மக்கள் உங்களை (தி.மு.க.) மறந்தார்கள். வீட்டுக்கு தி.மு.க; நாட்டுக்கு அண்ணா தி.மு.க. என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மக்களுக்கு உழைக்கும் கட்சி அண்ணா தி.மு.க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அம்மா மறைந்தாலும் அம்மாவின் திட்டங்கள், சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. ஒருவன் பிறக்கிறான். வாழ்கிறான். மறைகிறான். இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு என்ன சேவைகள் செய்தார்களோ அது தான் மக்கள் மனதில் நிற்கும். அந்த வகையில் இரு பெரும் தலைவர்களும் மக்களுக்கு நன்மை செய்தார்கள். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்கள். எனவே மக்கள் அந்த இரு பெரும் தலைவர்களை தெய்வங்களாக கருதுகிறார்கள்.

குடும்பத்துக்கு உழைக்கும் தி.மு.க.

மக்களுக்காக உழைக்க வேண்டும். அது கருணாநிதி குடும்பத்துக்கு கிடையாது. ஸ்டாலின் ஆட்சிக்கு வர துடியாய் துடிக்கிறார். வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்கள் தான் நீதிபதி. மக்கள் தான் தீர்ப்பு கூறவேண்டும். எங்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *