சிறுகதை

வீட்டுக்காரன் மட்டும் வேணும் | ராஜா செல்லமுத்து

“கூட்டுக் குடும்பக் கூடுகளை தனிக் குடித்தனங்கள் தான் தவிடு பொடியாக்குகின்றன”

இரண்டு பெண்களைப் பெற்றால் எப்படி இருக்குமென்று பெண்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான்

தெரியும் ; ரத்தினம் கொஞ்சம் தெளிவில்லாமலே இருந்தான்.

மூத்தவளுக்கும் இந்த வருசம் எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சிரணும். இல்ல எளையவளும் படிச்சு முடிச்சுட்டு ஒண்ணா வந்து நிப்பா .அப்பெறம் ரெண்டு பேரையும் ஒரே நேரத்தில் கட்டிக் குடுக்கிறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கும் என்று மனைவி லசுமியிடம் பேசிக் கொண்டிருந்தான் ரத்தினம்.

ஆமா நீங்க சொல்றது நிஜம் தான். நம்ம ஆளுகள்ல நல்ல பயலுகளா கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணனும் ;இல்ல பெரிய பிரச்சினை தான். யாருகிட்டயாவது சொல்லி வைப்போமா? அன்று லட்சுமியும் தன் பங்குக்குப் பேசினாள்.

ஏய் ….இன்னும் அந்தக்காலம் மாதிரியே பேசிட்டு இருக்க. திருமணத்தகவல் மையம் எவ்வளவு இருக்கு பொண்ணோட தகுதிக்கும் மேற் படிப்பு விரங்கள பதிஞ்சு வைப்போம் ; நல்ல இடமா பொண்ணோட தகுதிக்கும் நம்மோட குடும்பத்துக்கும் தகுந்த மாதிரியான குடும்பம் இருந்தா உடனே பேசி முடிக்கலாமே .அத விட்டு தரகன தேடுனம்னா .அவ்வளவு தான். அவன் தினமும் போட்டாவ கொண்டு வந்து குடுத்திட்டு நம்மகிட்ட பணம் வாங்குறதிலயே குறியா இருப்பான். மொதல்ல நம்ம பொண்ணோட ப்ரோபைல திருமண தகவல் மையத்தில பதிவு பண்ண ஏற்பாடு பண்ணு என்ற ரத்தினம் லட்சுமியிடம் சொல்லிவிட்டு அலுவலகம் சென்றான்.

குளித்துக் கொண்டிருந்த தாரணி அப்பா அம்மா பேசுவதைச் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

என்னம்மா மறுபடியும் கல்யாண பேச்சா? என்று நக்கல் கலந்த சிரிப்பில் ஈரம் கண்ட கூந்தலை டவலால் துடைத்துக் கொண்டே இருந்தாள்.

இடது வலது என்று மாறிமாறி கூந்தலைப் பிரித்துப் போட்டு துவட்டிக் கொண்டே இருந்தாள்.

” ஏய் ….அப்பா சொன்னத கேட்டயில்ல’’

“ஆமா தகவல் மையத்தில பதிஞ்சு வைக்கணுமா?’’

“ஆமா”

“சரி மொதல்ல டிபன் எடுத்து வையி. அப்பெறமா பதிவு பண்ணலாம் என்ற தாரணி சல் சல் என்று நுனிக் கூந்தலைத் தட்டினாள். உச்சந்தலையில் தேங்கி நின்ற தண்ணீல் ஒவ்வொரு முடியாய் பற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்து நுனிக் கூந்தல் கழிந்து பந்து போல் விழுந்ததைத் தட்டிக் கொண்டே இருந்தாள்.

“ஏய் வா டிபன் ரெடி’’ என்று அம்மா சொன்ன போது ஓரளவு காய்ந்த கூந்தலை அப்படியே அள்ளிக் கட்டி பின் பக்கமாய்த் தூக்கிப் போட்டாள் .

இதோ வந்திட்டேனயா என்று அவள் சாப்பிடும் இடத்திற்கு ஓடிய போது முடிந்த கூந்தலில் மொத்த ஈரமும் முட்டிக் கொண்டு வந்து அவள் பின் புறமுதுகை அழகாய் நனைத்து விட்டிருந்தது.

ஜல் ஜல் என் ஈரக் கொலுசின் சத்தம் சன்னமாய்க் கேட்க நடந்து போனவள் டைனிங் ஹாலில் உட்கார்ந்தாள்.

மூன்று இட்லி சடட்னி பொடி சகிதம் தட்டில் இருந்தது.

என்னம்மா தட்டுல இந்தியாவ வச்சிருக்க

என்னடி சொல்ற. இட்லியும் சட்னியும் தான வச்சிருக்கேன். நான் எங்க இந்தியாவ வச்சிருக்கேன் என்று சொல்லிக் கொண்டே லட்சுமி முன்னேறினாள்.

இந்தா பாரு இது கிரீன்சட்னி . இது வொயிட் சட்னி. இது ரெட் சட்னி .அப்படின்னா. இது தேசியக் கொடியோட நிறம் தானே .அப்பின்னா இது இந்தியா தான என்று தாரணி சொன்ன போது கொள் எனச் சிரித்தாள் லட்சுமி

“ஏய் வாலு” மொதல்ல அப்பா சொன்னத செய்யி. போ போயி உன்னோட ப்ரோபைல தகவல் மையத்தில் பதிவு பண்ணி வையி . மத்தத அப்பெறம் பாக்கலாம் என்ற லட்சுமி லேப்டாப்பை எடுத்து வந்து தாரணியிடம் வைத்தாள்.

அம்மா ஓபன் பண்ணு என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் சொல்லச் சொல்ல லட்சுமி மகளின் ப்ரோபைலை அப்லோடு செய்து கொண்டிருந்தள்…. “ம்” பாக்கலாம் என்று லட்சுமி சொல்லி தாரணியும் தன் பங்குக்குச் சிரித்துக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன.

ஏன் ஒரு வரன் கூட பிடிக்கலையா தாரணி? என்று ரத்தினம் கேட்டார்

‘‘அப்பா வந்த வரன் எல்லாம் நல்லா தான்பா இருக்கு…’’

வேறென்ன குறைம்மா ”

“எல்லாருக்கும் அப்பா அம்மா குடும்பம்னு நிறைய இருக்காங்கப்பா

“இருந்தா என்னம்மா”

“அட போப்பா இப்படி நிறைய ஆளுகள பாத்தாலே எனக்கு அலர்ஜி. நான் என் புருசன் மட்டும் தான்.

இருக்கணும் .ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க. எனக்கு சாப்பாடு குடு. டிபன் எடுத்து வையி. மாத்திரை குடுன்னு யாரும் கேக்க கூடாதுப்பா .நான் என் வீட்டுக்காரன் மட்டும் தான் இருக்கணும். .

அப்படி இருக்கிற மாதிரி அதுக்கு மட்டும் சம்மதிக்கிற மாதிரி இருக்கிற குடும்பமா இருந்தா பாருப்பா. இல்ல எனக்கு இப்போதைக்கு கல்யாணமே வேணாம் என்று ஒரே மூச்சில் சொன்னாள் தாரணி

என்னது இவ்வளவு கட்டுப்பாடா? என்று வியர்ந்தாள் லட்சுமி

ஆமாப்பா உங்கள மாதிரியெல்லாம் என்னால வாழ முடியாது .அப்படி ஒரு பையன் இருந்தா பாருப்பா என்று சட்டென கிளம்பினாள் தாரணி.

ரத்தினமும் லட்சுமியும் விக்கித்து போய்ப் பார்த்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *