முழு தகவல்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல்கள்

இந்தியாவில், கொரோனா தொற்றின் முதல் அலையை ஓரளவு வென்று, நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மக்கள் நிமிர நினைத்த வேளையில், இரண்டாம் அலை பெரும் வீச்சோடு, இந்தியாவில் பரவி வருகிறது. கொரோனா என்றால் என்ன? இதை எப்படி நாம் எதிர்க்கொள்வது? நாம் எப்பொழுது மருத்துவரை அனுக வேண்டும்? தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? வீட்டுத்தனிமையில் இருக்கும் பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளை காண்போம்.

கொரோனா தொற்றும் தடுப்பூசியும்:

கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மக்களுக்கான ஐயங்கள் குறித்தும் மருத்துவ வல்லுநர் டாக்டர் பெரியாண்டவர் மக்கள் குரலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:–

கொரோனா தொற்றுப் பரவலை, மக்களில் பலர் பெரும் பயத்துடனும், வேறுசிலர் மிகவும் அலட்சியமாகவும் எதிர்கொள்கிறார்கள், இரண்டுமே தவறானது. மாறாக, கொரோனா தொற்றுப் பரவலை எச்சரிக்கையுடன் அணுகுவதே இதற்கு சரியான தீர்வு. அதன்படி, கொரோனா வைரஸ் என்பதும், புளு காய்ச்சல் (INFLUENZA) என்று அழைக்கப்படும், காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை தொற்று வைரஸ்தான். எனவே, இதில் அதிக பீதி கொள்ள தேவையில்லை.

பொதுவாக, புளு காய்ச்சல் என்பது வெறுமனே காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தி விட்டு, அதற்கு சரியான மருந்துகள் எடுக்கும் போது, ஒரு சில நாட்களில் சரியாகி விடும். அதேபோலத்தான், இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதமான மக்களுக்கு, சதாரண மருந்து மாத்திரைகளிலேயே சரியாகி விடுகிறது. மீதமுள்ள 5 முதல் 10 சதவீத மக்களுக்கே நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் கூட, கோவிட் 19 வைரசே, நுரையீரல் வரை சென்று பாதிப்பதில்லை.

கொரோனா என்ன செய்கிறது?

மாறாக, கோவிட்–19 வைரஸ் உடலுக்குள் சென்றதும், நமது உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் திறன் (IMMUNITY SYSTEM) வேலை செய்ய தொடங்கி, சிலருக்கு அதிக அளவான எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்து, அது நுரையீரலை பாதித்து விடுகிறது. உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பாற்றலை, கொரோனா வைரஸ் திசைமாற்றி செயல்பட வைத்து விடுவதாலேயே, இந்த நிலை ஏற்பட்டு விடுகிறது என்பது மருத்துவ ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

எனவே, யார் ஒருவருக்கும் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, நாக்கில் சுவையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும் போது, மருத்துவர் ஆலோசனையுடன் ஓரிரு நாட்கள் அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு மேலாக பாதிப்பு தொடருமானால், மருத்துவர்களை கலந்து ஆலோசித்து, தேவையானால் ‘கோவிட்’ சோதனை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தி விட்டால், சிகிச்சை அளிப்பதும் குணமாவதும் எளிதாக இருக்கும்.

மக்கள் தேவையற்ற பீதியை நீக்கி, எச்சரிக்கையுடன் இதனைத்தான் செய்ய வேண்டும். நாட்டில், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அதற்கு தடுப்பூசி ஒன்றே வழி. எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கும் போது, கொரோனா பரவல் என்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டுவிடும். அது வரையில், அரசு கூறியுள்ள சுகாதாரமான வழிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல்

தடுப்பூசியின் நிலை என்ன?

அதுதவிர, தடுப்பூசி குறித்தும் மக்களிடம் பல்வேறு தவறான எண்ணங்கள் உள்ளதை தெளிவுபடுத்த வேண்டும். தடுப்பூசிகள் ஒன்றே இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்று சொன்னேன். ஆனால், கொரோனாவை கையாளுதலில் உள்ள தவறை, மக்கள் இதிலும் செய்கிறார்கள். சிலர் தடுப்பூசியை கண்டு தேவையில்லாத பயம் கொள்கிறார்கள். வேறு சிலர், தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்று, பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட்டு விடுகிறார்கள். இரண்டுமே தவறானது என்பதே உண்மை.

கொரோனா தடுப்பூசி நமது உடலில், எதிர்ப்பாற்றலை மட்டுமே (IMMUNITY SYSTEM) மேம்படுத்துகிறது. அதன் மூலம், கொரோனா வைரஸ் உடலில் தொற்றினால், பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது. அதாவது, நுரையீரல் பாதிப்பு வரையில் செல்லாமல் தடுக்க முடியும். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட நாளில் இருந்தே, இந்த எதிர்ப்பாற்றல் வந்துவிடும் என்று மக்கள் தவறான கண்ணோட்டத்தோடு இருக்கிறார்கள். அதனால், முகக்கவசம் கூட அணிவதை தவிர்க்கிறார்கள்.

எப்போது பாதுகாக்கும்?

உண்மையில், தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட பிறகு, ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கு ஏற்ப, 15 முதல் 30 நாட்களுக்கு மேல்தான் நோய் எதிர்ப்பாற்றலே உருவாகும். அதிலும் கூட, சிலருக்கு ஆண்டிபாடி என்று அழைக்கப்படும் நோய் எதிர்ப்பாற்றல் அளவு எல்லோருக்கும் ஒரே மாதிரி உருவாவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதனால்தான் தடுப்பூசியின் செயல்படும் திறனை 80 முதல் 90 சதவீதம் வரை என்று வரையறுத்துள்ளார்கள்.

எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட எல்லோருக்கும் உடலில் ஒரே அளவில், நோய் தடுப்பாற்றல் வேலை செய்யாது என்பதால், நாட்டு மக்களில் 70 சதவீதம் மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் போதுதான், நாம் முகக்கவசம் உள்ளிட்ட தனிமனித பாதுகாப்பு நடவடிக்கைகளை தவிர்க்க முடியும். அதுவரையில், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கூட, இப்போது உள்ளது போலவே முகக்கவசம், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்கவே வேண்டும். அதுதவிர, உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம். அதேவேளை, உடலுக்கு கேடு விளைவிக்கும் தேவையற்ற உணவுகளை தவிர்ப்பதும் முக்கியமானது (JUNG FOOD) என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் டாக்டர் பெரியாண்டவர்.

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

கொரோனா தொற்றால், அதிக பாதிப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை முக்கியமானதாக உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலை, மிகப் பெரிய பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, பல்வேறு நாடுகளும் ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது.

செறிவூட்டியின் விலைகள்

இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளின் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது. ரூ.30 ஆயிரம் விலையில் விற்கப்பட்ட இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்போதுரூ.60 ஆயிரத்துக்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது என்றும், சில வேளைகளில் ரூ. 90 ஆயிரம் வரை விற்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளின் தேவை, செயல்படும் தன்மை குறித்து அறிந்து கொள்வது முக்கியமானது. பொதுவாக, கோவிட்–19 எனப்படும் கொரோனா பாதிப்பு, 5 முதல் 10 சதவீதம் பேருக்கு நுரையீரலை தாக்கி, உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் செய்து விடுகிறது. அதனால்தான், நாடு முழுக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றிய பேச்சாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, உடலில் ஆக்சிஜன், 94 என்ற அளவுக்கு கீழ் சென்றால், அத்தகைய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால், நாடு முழுக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், குறைந்த அளவு ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கு, இத்தகைய ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.

காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி

அதன்படி, ஆக்சிஜன் செறிவு அளவு 88 முதல் 92 வரை உள்ளவர்களுக்கு, இந்த சாதனம் உதவும். பல்வேறு தொழில்நிறுவனங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜன்கள் சிலிண்டர்கள் வழியாக வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீட்டில் இயக்கக்கூடிய சாதனங்கள்.

நம் வீடுகளுள்ள பகுதி காற்றிலேயே 79 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் கலந்து உள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், இதனை பிரித்து நமக்கு வழங்குகிறது. அதன்படி, நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கு இந்த சாதனம் உதவியாக இருக்கும். ஆனால், தீவிர நோய் பாதிப்புக்குள்ளாகி, நிமிடத்திற்கு 40 முதல் 50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுவோர்களுக்கு இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவ முடியாது.

ஆனால், கோவிட் நோயாளிகள் அதிகரிப்பால், ஆக்ஸிஜன் படுக்கைகள் பற்றாக்குறை அனைத்து இடங்களிலும் உள்ளது. அதனை சரிசெய்ய, குறைந்த அளவு ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளை வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசும், மருத்துவ வல்லுநர்களும் அறிவுறுத்துகிறார்கள். அத்தகையவர்களுக்கு இந்த ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் பெரும் உறுதுணையாக இருக்கிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 90 சதவீதம் தூய்மையானதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *