நாடும் நடப்பும்

வீடு கட்ட மானியக் கடன் :ரூ.60,000 கோடியில் மத்திய அரசின் விரிவான திட்டம்


ஆர். முத்துக்குமார்


உலக முன்னணி பொருளாதாரப் பட்டியலில் 5 இடத்தை பெற்று விட்ட நாம் சாமானியனின் உலக சராசரி வாழ்க்கை தரத்தையும் எட்டியாக வேண்டும் அல்லவா? தனிநபர் வருவாய், தனிநபர் மகிழ்ச்சி குறியீடு போன்ற எல்லா பட்டியலிலும் நாம் மிகவும் பின்தங்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.

நமது தினக் கூலி சாமானியனுக்கு சொந்த ஊரிலிருந்து 10 கிலோமீட்டர் எல்லைக்கு அப்பால் உள்ள விடுமுறை சுற்றுலாப் பகுதியும் பயணங்களும் எட்டாக் கனியாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.

ஒரு சென்னை ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது தனது ஆசையெல்லாம் என்றேனும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியில் “குளிர்” சுகத்தை குடும்பத்தாருடன் சென்று அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.

அதை ஏன் செய்யவில்லை எனக் கேட்டபோது எங்கே சார் பிள்ளைகள் படிப்பு, சாப்பாடு, ஆடைகள் மற்றும் வீட்டு வாடகைக்கே சம்பாத்தியம் போதவில்லை என்று கூறினார்.

இது எல்லாமே அன்றாட அத்தியாவசிய செலவுகள் தான், ஆடம்பரம் ஏதுமில்லை, ஆனால் அவரால் என்றேனும் குடும்பமாக ஜாலியாக சில நாட்கள் இருக்க முடியாத நிதி நெருக்கடியான வாழ்க்கை இருப்பதால் அவர் போன்ற பல லட்சம் பேருக்கு அரசு எப்படி உதவி செய்யலாம்?

அத்தியாவசியமான தேவை மூன்றுவேளை உணவு, உடை, குடியிருக்க வீடு என்பது தான், இதில் கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கி கட்டு என்று வாழ்ந்திட தன்னை பாதுகாப்பான கூரை கொண்ட வீட்டில் இருந்தால் தானே அதை உறுதி செய்து ஆரோக்கியமாக வாழ முடியும்!

ஆக பொருளாதார வளர்ச்சியின் உண்மையான முகமாக இருக்கும் அந்நாட்டு குடிமகன்களின் மகிழ்ச்சியை உறுதி செய்யும் முக்கிய கட்டுமானம் குடியிருக்க ஒரு வீடு!

நம் நாட்டில் பெருவாரியான பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் பிரதேசங்கள் ஆகும். ஆகவே செலவில்லா ஓலைக் குடிசை கொண்ட வீடுகளில் திடீர் தீ ஏற்பட்டு எரிந்து சாம்பலாகி விடும் போது உயிர் சேதமும் உடைமைகளும் இழந்து திக்கற்று காட்சியளிப்பார்கள்.

இதை 1960 களில் இருந்த மத்திய – மாநில அரசுகள் விசேஷ கவனம் செலுத்தி குடிசைகளை அடுக்குமாடி வீடுகளாக மாற்றும் திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்து நிலைமையை நிவர்த்தி செய்தது.

ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட நாடு என்பதால் எல்லோருக்கும் வீடு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஆனால் எல்லோருக்கும் பாதுகாப்பான இல்லத்தை உறுதி செய்ய மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு வீட்டுக்கடன் பெறுவோருக்கு ரூ.60 ஆயிரம் கோடி வட்டி மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் மானியம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் வீட்டுக்கடன் வட்டி மானிய திட்டம் தயாராகி விட்டதாகவும் மத்திய அமைச்சரவை இதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரூ.60 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தால் நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 25 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வீட்டுக்கடன் பெறுவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள். அதேநேரம் மொத்தக் கடனில் ரூ.9 லட்சத்துக்கு மட்டும் 3 முதல் 6.5 சதவீதத்துக்குள் வட்டி மானியம் வழங்கப்படும். மீதித் தொகைக்கு வங்கிகளின் கடன் திட்டம் உதவும்.

இத்தகைய விரிவான திட்டத்தை வரவிருக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல்களையும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி இது போன்ற ஒரு திட்டத்தை அறிவிக்க தயாராகி இருக்கும்! எது எப்படியோ, எல்லாமும் எல்லாருக்கும் என்பதை உறுதி செய்யும் ஒரு முக்கிய அம்சம் ஜனநாயக ஆட்சியின் பிரதான கடமை என்பதால் இது போன்ற நாட்டு நலன் கருதி அறிவிப்பாகும் மக்கள் நலத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *