செய்திகள்

வீடு கட்டும் திட்டத்திற்கு ஜெயலலிதாவின் ஆட்சியே முன்னோடி சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை, ஜூலை 20

வீடு கட்டும் திட்டத்திற்கு ஜெயலலிதாவின் ஆட்சியே முன்னோடி என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

சட்டசபையில் இன்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய துறைகள் தொடர்பான மானிய கோரிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது வீட்டு வசதித்துறை சார்பாக 10 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது எத்தனை வீடுகள் கட்டி முடித்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:

2011 2016 வரை 14 ஆயிரத்து 63 குடியிருப்புகளும், 2016 முதல் 2019 மார்ச் வரை 10 ஆயிரத்து 224 வீடுகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 347 வீடுகளை அம்மாவின் அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மனைகள் உருவாக்கப்படுகிறது. சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் 18 ஆயிரத்து 765 குடியிருப்புகளும், மேம்படுத்தப்பட்ட மனைகள் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2023ல் 15 லட்சம் வீடுகள் குடிசை பகுதி மக்களுக்கு கட்டித்தரப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.

குடிசைகளற்ற மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கிராமங்களை உருவாக்கும் வகையில் நிதி ஆதாரத்தை திரட்டி வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிசை பகுதி மக்களுக்கு தரமான, உறுதியான வீடுகள் கட்டித்தரப்படும்.

1970ல் உருவான வீட்டுவசதித்துறை

1970ம் ஆண்டு வீட்டுவசதித்துறை உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு வரை கடந்த 41 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் அம்மாவின் ஆட்சியில் இதுவரை 7 ஆயிரத்து 638 கோடியில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளில் 41 ஆண்டுகளில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை மிஞ்சி அம்மாவின் அரசு சாதனை படைத்தது.

வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. அதில் 2 பிரிவு செயல்படுத்தப்பட்டு வந்தன. தற்போது 300 சதுரடியில் தானாக வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

4 லட்சத்து 67 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உள்ள வீடுகளை கட்டிக்கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வீடு கட்டும் திட்டத்திற்கு இந்தியாவிலேயே ஜெயலலிதாவின் ஆட்சி தான் முன்னோடி ஆட்சி ஆகும். உண்ண உணவு, உடுக்க உடையும், இருக்க இடமும் வழங்கும் அரசு அம்மாவின் அரசு ஆகும் என்றார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *