லக்னோ, நவ. 12–
உத்தரபிரதேசத்தில் வீடு கட்டும் போது மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி. இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி, உயிரிழந்த பெண்களின் உடல் மீட்கப்பட்டது.
முதல்வர் இரங்கல்
இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘மண் சரிவில் சிக்கி, உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.