செய்திகள்

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4,800 நிவாரணம்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

சென்னை, நவ. 14–

மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– தமிழக முதல்வரின் நேரடி தலையீட்டால், சென்னையில் இன்று எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் இன்று கடலூர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரும், மயிலாடுதுறையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரும் நிவாரணப் பணிகளை கவனித்து வருகிறார்கள்.

முதல்வர், அமைச்சர்கள் நேரடியாக களத்தில் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

தற்போது வீடுகளுக்கு தண்ணீர் புகுந்திருந்தால் ரூ.4800, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000, பகுதி சேதமடைந்திருந்தால் ரூ.4100, கான்கிரீட் கட்டடங்கள் இடிந்திருந்தால் ரூ.95,000ம், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது. தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

இந்த வரையறைப்படிதான் அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. முதல்வரின் ஆய்விற்குப் பின் இந்த தொகைகளை உடனடியாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு, கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் பணிகள் செய்யப்படும். கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 52 ஆயிரத்து 751 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அந்தப் பணிகளை செய்து வருகிறது.

எதிர்வரும் மழையை சமாளிக்க உரிய ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக தற்போது மழையை எதிர்கொண்டதுபோல, திறமையாக வரும் மழையையும் எதிர்கொள்வோம்” என்று அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *