சிறுகதை

வீடியோ கால் – ராஜா செல்லமுத்து

சந்தடிகள் நிறைந்த ஒரு பேருந்தில் யாரோ ஒருவர் உரத்த குரலில் பேசும் சத்தம் கேட்டது .

பேருந்து ஓடும் சத்தம்|சாலைகளில் போய்க் கொண்டிருக்கும் வாகனங்களின் சத்தம். இது தவிர அவரவர் செல்போன்களை வைத்துக்கொண்டு செய்யும் அட்டகாசச் சத்தங்கள் என்று அத்தனையும் மீறி ஒருவரின் குரல் மட்டும் தனியாகக் கேட்டது.

இதைப் பார்த்த கோபால் யாரது இப்படி பேசிட்டு இருக்கிறது? பொதுமக்கள் கூடுற இடத்தில் பயணிக்கிற இடத்துல இப்படி யாரு காட்டு கத்தல்கத்துறது.? யார் அந்த மனுஷன் என்று கூட்டத்தில் தலையைத் தூக்கித் தூக்கி பார்த்தான் கோபால்.

பேச்சு மட்டும்தான் வந்ததே ஒழிய பேசுவது யார்? என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

காரணம் பேருந்து முழுவதும் அட்டை போட ஒட்டிக்கொண்டு நிற்கும் கூட்டம் .சத்தமாக பேசும் அந்த நபரை யாரும் தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் யார் யாரையும் கவலைப்படுவது நலம் விசாரிப்பது இல்லை.

இவர்கள் யார் ?அவர் யார் ?என்று தெரியாமல் தான் பயணித்துக் கொண்டிருந்தார்கள்…

அதில் கோபாலும் ஒருவன் சத்தமாக பேசும் அந்த நபரின் குரலைக் கேட்டு கோபம் அடைந்த கோபால் ஆட்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிவிட்டு குரல் வரும் திசையை நோக்கி நகர்ந்தான்

கண்டுபிடிக்க முடியாமல் இருந்த அந்தக் குரலை இப்போது கண்டுபிடித்தான்.

உயரமாக அமர்ந்திருந்த ஒரு ஆள் தன் கையில் இருந்த செல்போனை எதிர் சீட்டில் இருக்கும் கம்பியில் வைத்துக் கொண்டு வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தார்.

வீடியோ காலில் பேசும் பெண்ணும் சத்தமாக பேச இவரும் சத்தமாக பேச யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இதைப் பேருந்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இலவசமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டியில் பார்ப்பதைப் போல அனைவரும் அந்த வீடியோ காலில் தோன்றும் பெண்ணையும் அவள் செய்யும் அட்டகாசத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீடியோ கால் பேசும் அந்த நபர் மற்றவர்களைப் பற்றி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் அந்த பெண்ணுடன் பேசுவதும் சிரிப்பதுமாய் இருந்தார்.

எவ்வளவோ பயணிகள் என்று இருக்கும் அந்தப் பேருந்தில் அதை யாரும் தட்டி கேட்பதாகத் தெரியவில்லை . சிறிது நேரம் வீடியோ கால் பேசுவதையும் அந்த மனிதர் நடவடிக்கையையும் கவனித்த கோபால் திடீரென்று அவன் கையில் வைத்து பேசிக்கொண்டு இருந்த செல்போனைப் பிடிங்கினான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த ஆள் ஆடி போயிருந்தார். அதற்குள் கோபமடைந்த கோபால்

வீடியோ பேசும் அந்த நபரைத் திட்டினான்.

ஒரு பப்ளிக் பிளேஸ்ல இப்படியா? நடந்துக்கிறது. இது தப்பு நீ பேசுற வீடியோ கால அத்தனை பேரும் பார்த்து கிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு யாரு ? ஏன் அவங்க வீடியோ கால் பேசினீங்க என்று கோபால் கேட்டபோது

ஐயா மன்னிச்சிடுங்க. அது பொண்ணு இல்ல .என் பொண்டாட்டி. பிள்ளைகள் எல்லாம் டியூசன் போனதுக்கப்புறம் ,இப்படி கொஞ்ச நேரம் வீடியோ கால் பண்ணி பேசுறதுல ஒரு திருப்தி அதான் என்று சாென்னான் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தவன்

அது சரி அதுக்காக பப்ளிக் எல்லாம் பார்க்கிற மாதிரி தான் போன தூக்கி மேல வச்சுட்டு பேசுறதா? அநாகரீகமான செயல் இல்லையா இது ? நீங்க பேசுறது அடுத்த பஸ்ஸுக்கு கேட்டு, ரோட்டுக்கு போகுது. அப்பிடி பேசுறீங்க இதைப்பற்றி யாரும் உங்களை கம்ப்ளைன்ட் பண்ணல. ஏன் இந்த வீடியோவை பின்னாடி இருக்கிற யாரும் வீடியோ எடுத்து தப்பா வீடியோ போட்டுட்டா என்ன பண்ணுவீங்க? தப்பு சார் .இனிமே வீடியோ கால் பேசாதீங்க. போன்ல பேசுங்க. வீடியோ கால் தேவைப்பட்டா நீங்க மட்டும் தனியா இருக்கும் போது பேசுங்க. ஏன்னா உங்களுக்கு மட்டும் இல்ல. உங்க வீட்டுல இருக்குற பொம்பளைங்களுக்கும் இது பொருந்தும் என்றான்.

கோபால் சொன்னதை பேருந்தில் இருந்த அத்தனை பேரும் ஆமோதித்தார்கள்.

தான் செய்த தவறை உணர்ந்து கொண்ட அந்த நபர்

தம்பி இனிமே நான் எங்க போனாலும் வீடியோ கால் பேச மாட்டேன். இது தப்பு என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டான், வீடியோ கால் பேசியவன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *